சனி, 18 செப்டம்பர், 2010

'இயக்க வெறி'


ரமழான் மாதத்தின் இறுதிப் பத்தில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான அமல்களில் ஒன்றாக இஃதிகாப் கருதப்படுகிறது.

நமது நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதும் ஏராளமானோர் இவ் அமலில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வதும் வழமை.

இந்த வருடம் ரமழானின் இறுதிப் பத்தில் கொழும்பிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாப் இருந்த சில சகோதரர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் கவலைக்குரியது மட்டுமல்ல நாமனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமாகும்.

குறித்த பள்ளிவாசலில் இஸ்லாமிய இயக்கம் ஒன்றைச் சேர்ந்த சுமார் 15 சகோதரர்கள் இம் முறை இஃதிகாப் அமலில் ஈடுபட்டிருந்தனர்.
சரியாக நோன்பு 28 அன்று நண்பகல் இப் பள்ளிவாசலுக்கு வந்த இன்னுமொரு இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த சிலர் இஃதிகாப் இருந்த சகோதரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரியதுடன் அவர்களைத் தாக்குவதற்கும் முற்பட்டுள்ளனர்.

இவ் விவகாரம் பொலிஸ் நிலையம் வரை செல்ல பிரச்சினையைப் பெரிதுபடுத்த விரும்பாத இஃதிகாப் இருந்த சகோதரர்கள் அங்கிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். ஆசையோடு செய்த அமலை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற கவலை இன்றும் அவர்களை ஆட்கொண்டுள்ளது.

"இயக்க வெறி' பிடித்து அலையும் இவர்கள் தமது இயக்கத்தை வளர்க்கிறார்களோ இல்லையோ இஸ்லாத்தை அழிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.

16.09.2010

புதன், 14 ஏப்ரல், 2010

குழந்தைகளும் கணிதமும்


குழந்தைகளும் கணிதமும்

டிரக்டர்  வண்டி செங்கற்களைச் சொரிவது போல இன்று அறிவியல் தகவல்கள் வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கின்றன. இன்றைய அறிவியல் யுகத்தைப் புறக்கணித்து விட்டு நம்மால் ஜீவிக்க முடியாத அளவுக்கு எம்மை அது ஆக்கிரமித்து விட்டது. “அறிவியல் இல்லையேல் வாழ்க்கையும் இல்லை”   என்றவாறு ஆகிவிட்டது.
இன்றைய அறிவியல் பௌதீகவியல்,  இரசாயனவியல்,  மருத்துவம்,  பொறியியல்,  இலத்திரனியல்,  விண்ணியல் என்று பல துறைகளாப் பிரிந்து அதற்குள்ளும் இன்னும்  நுன்அலகு கற்கைகள் விரிந்து செல்கிறது. இப்படி பெருகி விருட்சமாக வியாபித்து நிற்கும்  அறிவியலுக்கு கணிதம் தான் மூல வித்தாகும். எனவே தான் அறிவியல் தாய் கணிதம்  என்கிறார் இப்னுசீனா. தத்துவ ஞானத்திற்கு கூட கணிதம் தான் அடிப்படையாகும்.
கணிதம் நமக்கு நண்பனாக மாறிவிட்டால் எந்தப் பிரிவையும் அறிவது அல்லது கற்பிப்பது  இலகுவாகி விடும். புதுமையாகச் சிந்திப்பது அல்லது புதுமையாகச் சிந்திக்க செய்வதும்  இலகுவாகும். விரிவாக ஆராய்வது அல்லது ஆராயத் தூண்டுவது எளிதாக மாறி விடும்.
அதேவேளை குழந்தைகளும் கணிதப் பாடமும் என்பதை நினைத்தால் எனக்குச் சிரிப்புத்தான்  வருகிறது. குழந்தைகளுக்கு கணிதப் பாடமென்றால் கொலை நடுக்கம். சில குழந்தைகள்  பிழையாக கணக்குச் செய்வது, ஆசிரியரிடம் அடிவாங்குவதற்கு முன்பே காற்சட்டையில்  சிறுநீர்  கழித்து விடுவார்கள். கணக்கென்றால் ஒரே பயம். குழந்தைகளிடம் உங்களுடைய  கொப்பியை எடுத்து வந்து மாமாவிடம் காட்டுங்கள் என்றால் எந்தக் குழந்தையாவது கணிதக்  கொப்பியை எடுத்து வந்து காட்டுமா?  நிச்சயமாக இல்லை. மாறாக சித்திரக் கொப்பியைத்  தான் முதலாவது காட்டும் அதில் தான் “மிக நன்று”(Very Good) வாங்கியிருக்கும். கணக்குப் பாடத்தில் 5% குழந்தைகள் தான் சரி  எடுக்கின்றார்கள். இந்த அவல நிலைக்குக் காரணம் என்ன?
ஓழுங்காகக் கணக்குச் செய்யாத குழந்தைகளைப் பார்த்து நமது ஆசிரியரிகளும் பெற்றோரும்  கூறும் அபாயகரமான வார்த்தை “அவனுக்கு கணக்கு ஓடாது” அல்லது “அவனுக்கும்  கணக்குக்கும் ரொம்பத் தூரம்” என்று அடிக்கடி சொல்வதை நாம் கேட்கலாம். இவ்வாறு   அடிக்கடி சொல்வதால் கணக்குப் பாடத்தில் குழந்தைகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தி விடும்.  இந்த எதிர்மறையான அணுகுமுறை இல்லாதொழிக்கப்பட வேண்டும். ஒரு குழந்தையின் சுய  முன்னேற்றத்திலும் கல்வித் துறையில் வெற்றி பெறுவதற்குக் காரணமான கணித அறிவைப்  பெற்றுக் கொள்வதற்கு தேவையான தன்னம்பிக்கை பிள்ளைகளுக்கு நாம் வழங்க வேண்டும்.
கணிதப் பாடத்தில் நமது குழந்தைகள் பெறுகின்ற தேர்ச்சி மட்டம் தான் பிற்கால அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அவர்கள் காட்டல் போகின்ற திறமைக்கு சரியான திசை முகமாக அமையும். விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சிதான் ஒரு நாட்டின் அபிவிருத்தியின்  முன்னேற்றத்திற்கு குறி காட்டியாகும். அப்படியானால் நமது குழந்தைகள் இன்று  பெற்றிருக்கின்ற கணித அறிவைப் பொறுத்தே எதிர்  காலத்தில் நாட்டின் அபிவிருத்தி  அமையும் என்று கூறலாம்.
”எண்ணும் கண்ணெனத் தகும்” எண் எழுத்தில்லையேல் “என்ற மூதுரைகள் குழந்தைப்  பருவத்திலே எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுக்கின்றன. ஆரம்பத்தில் ஒரு  குழந்தைக்கு மொழியில் கொடுக்கப்படுகின்ற பயிற்சி கணிதத்தில் கொடுக்கப்படுவதில்லை.  அப்படியே சொல்லிக் கொடுத்தாலும் அது கற்பனை வடிவமாக மட்டுமே வழங்கப்படுகின்றது.  எண்கள் உணர்த்தும் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாத குழந்தை அவற்றைக் கற்பனைச்  சின்னங்களாகவே நினைக்கத் தொடங்குகின்றது. பின்னர்  கணிதத்தில் பயம் வருவதற்கு  இதுவே காரணமாக அமைகின்றது. தந்தையைக் காட்டி வாப்பா என்று சொல்லிக் கொடுக்கும்  போது வாப்பாவின் உருவத்தை நினைத்துக் கொள்வது போல 1, 2, …சொல்லிக் கொடுக்கும்  போது அக்குழந்தையால் எதையும் நினைக்க முடிவதில்லை.
கற்பனையாக வளர்த்துக் கொண்ட எண்களை கணிதப் பாடத்தில் படிக்கும் போது பயமே  ஏற்படுகின்றது. எண்களையும் அவற்றோடு தொடர்புடைய கணக்குகளையும் படிக்கும் போது  நடைமுறை உலகில் அவற்றைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாத குழந்தைகளுக்கு கணக்கு என்றைக்கும் வேப்பெண்ணையாக இருக்கின்றது.
எனவே குழந்தைகளுக்கு 1, 2, 3, …சொல்லிக் கொடுக்கும் போது அந்தந்த எண்களில்  விரல்களைக் காட்டியோ அல்லது குழந்தைகளுக்கு விருப்பமான பொம்மைகளைக் காட்டியோ  சொல்லிக் கொடுக்கலாம். நாம் பேசும் போது காட்டும் செயல்களைப் பார்த்தே அதிகம் கற்றுக்  கொள்ளும் குழந்தைகள் எண்களையும் அவ்வாறே இலகுவாக கற்றுக் கொள்ள  வழியேற்படுகின்றது.
கணக்குச் செய்யத் தெரியாத குழந்தைகளுக்கு அதை விட சின்னக் கணக்குகளைக் கொடுத்துச் செய்யச் சொல்லலாம். இவ்வாறு செய்வதால் ஏற்கனவே புரிந்து கொள்ள முடியாமல் தவறிய அடிப்படைக் கணித எண்ணக் கருக்களை புரிந்து கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். சரியான விடையைக் கண்டு பிடித்து விட்டாய், சரியாகச் செய்து விட்டாய் என்று பாராட்டுங்கள்.
கணக்குப் புதிர்களை கதையின் பின்னணியோடு கூறுவது மற்றொரு பயனுள்ள  வழிமுறையாகும். இதனால் குழந்தைகளிடையே கணக்கில் ஆர்வம் தூண்டப்படுவதோடு  அவர்கள் சிந்திக்கவும் தொடங்குகின்றனர்.
கணிதத்தில் ஆர்வம் காட்டாத குழந்தைகளுக்கு விளையாட்டுக் கணிதத்தில் நூல்களை  வாங்கிக் கொடுங்கள். கணிதத்தில் உள்ள கசப்பு மறைந்து அவர்களிடையே ஆர்வம் மெல்லத்  தலை தூக்குவதை உணரலாம்.
“கதை மூலம் கணிதம்” எவ்வாறு குழந்தைகளிடையே ஆர்வத்தையும் சிந்தனையையும்  தூண்டக் கூடிய வலுவான கருவி என்பதை விளக்க, இந்நூல் கணக்குகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு புதிரிலும் கணக்கின் வழிமுறை அமைப்பை மாற்றாமல் வெறும்  எண்ணிக்கைகளை மட்டும் மாற்றி புதிர்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது சிந்திக்கத் தூண்டுவதோடு கணக்கைப் பயன்படுத்தி ஒரு பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணலாம் என்பதற்கு நல்ல பயிற்சிகளாகவும் அமையலாம்.
http://www.idrees.lk

குழந்தைகளும் சினிமாவும்


குழந்தைகளும் சினிமாவும்

“சினிமா குறித்து பல்கலைக்கலகங்களில் எப்போதாவது பேசப்படலாம். ஆனால் அதற்குரிய கல்வி அந்தஸ்து தரப்படவில்லை. அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகள் நிகழும் இடங்களில் இக்கலை ஏற்புடையதாய் இல்லை. நம் இளைய தலைமுறை ஏதாவது ஒரு கலையின் அழகியல் குறித்து நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறார்கள் என்றால் அது சினிமாதான். ஆனால் பள்ளிப் பாடத்தில் சினிமா பற்றி எதுவுமே கிடையாது. ஆனால் சினிமா மக்கள் கலையாக உள்ளது. காரணம் மக்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதல்ல. துரதிஸ்டவசமாக மக்களை அது பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான். மக்களின் மனப்பாங்கை கருத்துக்களை சினிமா உருவாக்குகின்றது. சினிமா குறித்து ரசனை மக்களிடம் இல்லை. அது அவர்களுக்கு வழங்கப்படவில்லை. சினிமா பற்றிய ரசனை, அறிவு அவர்களுக்கு நகர்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா என்னும் மாபெரும் சக்தியின் முன்பாக அவர்கள் செயலிழந்து நிற்கிறார்கள்.
சினிமா கடந்த ஐம்பது ஆண்டுகளில் முக்கியமான சக்திவாய்ந்த கலையாக உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது. ஆனால் பண்பாட்டின் அங்கமாய் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என் இனிய நண்பர்களே! இசை, இலக்கியம், ஓவியம் பற்றி ஒன்றுமே அறியாதவரை கற்றறிந்தவராக ஏற்றுக்கொள்வீர்களா? இரு பெரிய பட்டங்கள் பெற்ற உங்களுக்கு சினிமா பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனாலும் கற்றறிந்த மேதையாக உங்களை எல்லோரும் கருதுகிறார்கள். அது தவறு. 1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்கள் முதன் முதலில் ஒளிதரும் பிம்பங்களை திரையில் காண்பித்த போது பிறந்தது ஒரு கலை மட்டுமல்ல அப்போது மனித மூளையில் உணர்வதற்கும் புரிந்துகொண்வதற்கும் ஒரு புதிய அமைப்புத் தோன்றியது என்பதுதான் உண்மையாகும். அதன் மூலம் மானுட வளர்ச்சிக்கான புதிய பாதை போடப்பட்டது. நல்ல இசை உணர்வுக்கு அடிப்படைச் சூழ்நிலையும் இசை உணர்வுக்கான மூலமும் இசையறிவும் தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் இசையும் காதுகளை அதை ரசிப்பதற்கேற்றவாறு வளப்படுத்துகிறது, மாற்றுகிறது என்ற காரல் மார்க்ஸின் அற்புதுமான கூற்று சினிமாவுக்கும் பொருந்தும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் சினிமாவின் வளர்ச்சி அதை நிரூபித்துள்ளது.”
இது சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் சினிமா பொன்விழாவை பாடசாலைகளில் பல்கலைக்கலகங்களில் கொண்டாட வேண்டுமென விரும்பிய Bela Balazs என்ற ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த சினிமாக் கோட்பாட்டாளர் ஒரு வரலாற்றுப் பேராசிரியருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியாகும். வளரும் தலைமுறையினருக்கு சினிமாவை ஏன் கற்பிக்க வேண்டும் என்பதற்கு இது வலிமையான ஆதாரமாகும்.
ஏன் சினிமாவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இன்று நாம் குழந்தைகளுக்கு எப்படியாவது ஆங்கிலத்தைக் கற்பித்து விட வேண்டுமென்று படாதபாடுபடுகிறோம் அல்லவா? அது ஏன்? இன்றைய நிலையில் தாய் மொழிமட்டும் ஒரு குழந்தைக்குப் போதாது. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்தால் தான் குழந்தையால் இந்த யுகத்தின் சவாலை எதிர் கொள்ள முடியும் என்று நாம் நம்புகின்றோம். தாய் மொழி என்பது அன்றாட வாழ்வில் நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள உதவுகின்றது. ஆங்கிலம் அந்நிய மொழி என்றாலும் அது படித்தவர்களுக்கு இரண்டாம் தாய்மொழியாகி விட்டது. ஆங்கிலம் இன்றி குழந்தை உயர்கல்வியை தெடர முடியாது. அறிவு சார்ந்த பல துறைகளில் நிபுனத்துவம் பெற முடியாது. ஆங்கிலத்தில் தான் எல்லாத் துறைகள் சம்பந்தமான நூல்களும் கூடுதலாக வெளிவருகின்றன. ஊர், மாவட்டம், நாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி செயற்படவும் ஆங்கிலம் அத்தியவசியமாகின்றது. அவ்வாறே கணிதமும் நமது அன்றாட வாழ்வுக்கு நடைமுறைக்கு தேவைப்படுகின்றது. கடைக்காரனுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை கணக்கிடுவதிலிருந்து பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வது வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் கணிதம் எல்லாத் துறைகளிலும் தீர்க்கமாக நிறைந்திருக்கின்றது. அவ்வாரே விஞ்ஞானமும் நம்மைச் சுற்றியுள்ள உண்மைகளை விந்தைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றது.
ஆனால் பண்பாடு (Culture) குறித்து குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கப்போகிறோமா? அவ்வாறு கற்பிப்பதற்கு என்ன வழிமுறைகளை செய்கின்றோம். உணவு, உடை, வாழ்வு முறை, பழக்கவழக்கங்கள் புறக்காரணிகளால் இவற்றில் ஏற்படும் தாக்கங்கள், மாற்றங்கள் குறித்த ஆய்வுதான் பண்பாடு ஆகும். பண்பாடு குறித்து ஒருவர் பயிலும் போது அதில் வரலாறு, அரசியல், நாடகம், இசை, சினமா, தொழிநுட்பம் எனப் பல விடயங்களை அறியமுடிகின்றது. குழந்தைகளுக்கு சினிமாவா? அப்படியென்றால், பிஞ்சு உள்ளத்தில் மோசமான காட்சிகள் எல்லாம் பதிவாகிவிடுமே என்று நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம்.
நான் சினிமா பற்றி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று சொல்வது சினிமா என்ற கலையின் தோற்றம் வளர்ச்சி, அது உருவாக்கிய மாபெரும் கலைஞர்கள், 21ம் நூற்றாண்டின் அதிவேக தொழிநுட்ப வளர்ச்சியில் சினிமா எடுத்துள்ள பரிமானங்கள், டெலிவிஷன் செயற்கைக் கோள்கள் என்பவற்றின் வரலாற்றையும் அவற்றைக் காண்டுபிடித்த விஞ்ஞானிகள் அவற்றின் உபயோகம் போன்ற பல விஷயங்கள் குழந்தைகளின் வயது நிலைகளுக்கேற்ப விளக்கலாம்.
சினிமா எல்லோருடைய வாழ்வையும் விதிவலக்கின்றி ஆக்கிரமித்துள்ளது. சினிமா பார்த்தால் சீரழிந்து போவீர்கள் என்ற கோஷமெல்லாம் சீக்கிறமே படிந்து போய்விட்டன. சினிமா, இசை, ஓவியம், இலக்கியம், நாடகம் என அனைத்தையும் உட்கொண்ட மாபெரும் கலையாகும். அது வெறும் மகிழ்விப்புக் கலை மட்டுமல்ல. ஒரு பண்பாட்டு பதிவுகையாகவும் ஆவணமாகவும் கொள்ளத்தக்கனவாக ஒரு நூற்றாண்டையும் தாண்டி வளர்ந்து செல்கின்றது. வேறு எந்தக் கலையாலும் சாதிக்க முடியாத அளவுக்கு மக்களின் வாழ்வை ஆட்கொண்டு விட்டது.
ஆனால் பொதுவாக தொழில் நுட்பத்தை (முற்றிலும் தொழில் நுட்பம் சார்ந்த சினிமாவை), விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை நாம் தீமைகளின் பட்டியலிலே சேர்ந்து வந்திருக்கின்றோம். இந்த எதிர் மறைப் பார்வை எம்மைப் பின்னோக்கித் தள்ளுவதில் தான் வெற்றி கண்டுள்ளதே தவிர எம்மை அதன் பாதிப்பிலிருந்து விடுவிக்கவில்லை என்பதை மறந்து விடக் கூடாது. எதிரிகளின் செயற்படுத்தும் அந்தக் கமராவை நாம் செயற்படுத்தாமல் அந்தக் கலையை மாற்றியமைக்க முடியாது. சினிமா முற்றிலும் தொழில் நுட்பம் சார்ந்த கலை. அக்கலை ஆரம்பத்தில் நமது பக்கத்தில் தான் இருந்தது. ராஜசீயவக்ரமய (அரச சாகஸம்) என்ற இலங்கையின் முதல் படத்தை எடுத்தவர் நூர்பாய் என்பவர் தான். சிறுபான்மைச் சமூகத்தவர்கள் தான் ஆரம்பத்தில் இலங்கை சினிமாவுக்கு பங்களித்துள்ளார்கள். எல்பின்ஸன், ஒலிம்பியா எல்லாம் எம்மவர் நடாத்திய பாரசீக நாடகக் கம்பனிகளின் கொட்டகைகளின் பெயர்களாகும்.
ரஷ்ய புரட்சியாளரான லெனின் தனது தீர்க்க தரிசனப் பார்வை “எல்லாக் கலைகளையும் விட சினிமா என்பது மிகவும் முக்கித்துவம் வாய்ந்த கலையாகும்” என்றார். அவர் கூறிய அந்த நூற்றாண்டு கடந்து இன்னும் சினிமா மற்றொல்லாக் கலைகளையும் விட விஞ்சியதாகவே இருப்பது சினிமா சக்தியை உணர்ந்தால் போதுமா? நமது புறத்தை வென்றெடுக்க அரசியல் சினிமா தீங்காகப்படுமானால் அகத்தை வென்றெடுக்க குழந்தை சினிமா தேவையாகும்.
குழந்தைகள் மனித உடலைத் தான்டிய சக்தியுடன் சாகசத்தில் ஈடுபடுவதையே குழந்தைகள் சினிமா என்று கருதுவதும் தவறு. குழந்தைகள் குறித்த திரைப்படங்கள் குழந்தைகள் பார்க்கும் படி எடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. பல திரைப் படங்கள் குழந்தைகளுக்கு அபாயகரமானதாகவும் அழிவுகளுமானதாகவும் இருக்கும் கரணிகளாக பெற்றோர்களையே சித்தரிக்கின்றன, பெற்றோர்கள் தர்மம், வன்முறை நீக்கம் செய்து கொள்ளாதவரை உண்மையான சமூகத்தில் நாம் எதிர்பார்க்க முடியாது.
விஸ்வாமித்ரன் என்ற சினிமா ஆய்வாளர் கூறுகின்றார். ஒவ்வொரு குழந்தை திரைப்படமும் முதலில் பெற்றோருக்கானது, வயது முதிர்ந்தவர்களுக்கானது. அவர்களது பார்வையை விசாலப்படுத்துவதற்கானது. அவர்கள் அடைய வேண்டிய புரிதலை அறிவுரைப்பதற்கானது. திரையில் பல்வேறு அகலப்படல்களோடு மூச்சுத்தினறத் தவித்துக் கொண்டிருக்கும் அதே சிறுவர்கள் தான் நிஜத்தில் அவர்களின் இல்லங்களில் வசிக்கும் சாகசம் செய்யத் தெரியாத சிறுவர்கள் என்பதை உணரச் செய்வது அந்தச் சிறுவர்கள் நிகழ் பொம்மைகளைப் பார்க்காமல் சகமனிதனால் பாவிக்கச் சொல்லிக் கற்றுத் தருவது. இத்தனை படிநிலைகளைக் கடந்திருந்தால் தான் குழந்தை சினிமா என்பது சிறுவரை சென்றடையும் சாத்தியம் பெறும் அதுவரை பெரியவர்களுக்கு மட்டுமேயான காட்சிப் பாட நூல்தான் அது.
தனிமனித மாற்றமே சமுகமாற்றத்தின் விதை என்பதை இறைத்தூதரும், அல் குர்ஆனும், சுன்னாவும், வலியுறுத்துகின்றன.
www.idrees.lk

குழந்தைகளும் விபத்தும் 3


குழந்தைகளும் விபத்தும் 3

வீட்டுவிபத்துகளில் பெரும்பாலானவற்றை நாம் அவதானத்துடனும் கவனத்துடனும் நடந்துகொள்வதன் மூலம் தவித்துக் கொள்ள முடியும்.
வீடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் கவனயீனம், தவறுதல் காரணமாகவே நிகழ்கின்றன. இத்தகைய விபத்துகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க குழந்தைகளை பயிற்றுவிப்பதன் மூலமும் பெற்றோர் தமது குழந்தைகள் விடயத்தில் அவதானமாக இருப்பதன் மூலமும் இவ்விபத்துகளில் பெரும்பாலானவற்றை தவிர்த்துக் கொள்ள முடியும். இதற்கான சில ஆலோசனைகளை நோக்குவோம்.
குழந்தைகளை தனியே வீடுகளில் விட்டுவிட்டுப் போவதை தவிர்த்தல் வேண்டும். வீட்டுக்குள்ளும் வெளியிலும் அவர்கள் ஓடிவிளையாடும் போது நாம் அவதானத்துடன் இருக்க வேண்டும். எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் திடீரென விபத்துகள் நிகழலாம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
தண்ணீர் கிடக்கும் அல்லது பொலிஷ் செய்யப்பட்ட தரை அல்லது மாபிள் தரை வழுக்கக்கூடும். இத்தகைய இடங்களில் குழந்தைகள் ஓடிவிளையாடுவதைத் தவிரத்தல் வேண்டும். வீட்டில் தரை, திண்ணை, படிக்கட்டுகள் என்பவற்றைத் துடைத்து துப்பரவாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வாசல்படியில் இடும் கிழிந்துபோன கால்துடைக்கும் தட்டி, கிழிந்துபோன தரைவிரிப்புகள், பாய்கள், வீட்டுத்தரையில் காணப்படக்கூடிய குழிகள், பள்ளங்கள் என்பவற்றில் குழந்தைகள் இடறிவிழாமல் இவற்றை அகற்றிவிடலாம் அல்லது சீர் செய்யலாம்.
வீட்டினுள்ளேயோ வெளியேயோ படிகளிலேயோ குழந்தைகள் ஓடியாடி விளையாடும் இடங்களில் தடையாக இருக்கக் கூடிய வகையில் பூச்சட்டி, கதிரைகள், விளையாட்டுப் பொருட்கள், பந்து போன்ற இன்னோரன்ன பொருட்கள் இருப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தொட்டில், கட்டில்களில் உறங்கும் குழந்தைகள் நித்திரையில் உருண்டு கீழே விழுந்துவிடாதிருக்க தலையணை போன்ற போதிய பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமயலறை, கிணற்றுக் கட்டு, சேறுதாங்கி, மலசலகூடம் போன்ற ஈரலிப்பான இடங்களில் சேறு, பாசி போன்றவை படிந்து காணப்படுவதால் குழந்தைகள் வழுக்கிவிடக்கூடிய அபாயம் உண்டு. எனவே இத்தகைய இடங்களில் சேறு, பாசிகளை அகற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற கிணறுகளைச் சுற்றி உறுதியான கட்டுக்களை அமைக்க வேண்டும். கிணற்றினுள் தலையை விட்டுப் பார்ப்பதைத் தவிர்த்துவிட வேண்டும்.
குழந்தைகள் மேலே ஏறுவதற்கு விரும்புவர். இதனாலும் விபத்துகள் வரலாம். எனவே தலைவாசல், கேற் என்பவற்றை மூடிவைத்து அவற்றில் பிள்ளைகள் ஏறாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏணிகள் இருந்தால் அவற்றைக் கீழே சாய்த்து வைத்தல் வேண்டும். வீட்டு முற்றம், வீட்டுத்தோட்டத்திலுள்ள மரங்களின் கிளைகளையும் வெட்டிவிடலாம். அல்லது குழந்தைகளின் ஏறும் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினால் பெற்றோர் அந்த இடங்களில் மிகவும் கண்காணிப்பாக இருக்க வேண்டும்.
வீடுகளிலுள்ள மதில்கள், வேலிகள் என்பவற்றை குழந்தைகள் ஏறாதவகையில் கட்டிக்கொள்ள வேண்டும். ஜன்னல்களை முடியுமாயி்ன் கம்பிவலையாவது போட்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மொட்டைமாடி, பல்கனி போன்ற இடங்களுக்கு குழந்தைகளைக் கொண்டு செல்வதை அல்லது அதில் ஏறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
குப்பைகூலங்களைப் போடுவதற்காகத் தோண்டும் குழிகள், பள்ளங்கள், ரோட்டருகில் காணப்படும் கான்கள் என்பவற்றைத் தூரத்திலிருந்து பார்த்தால் தெரியக்கூடிய வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றைச் சுற்றியுள்ள புதர்கள், செடிகொடிகள், புல் என்பவற்றை அகற்றுதல் வேண்டும். தேவையற்ற குழிகளை மூடிவிடல் வேண்டும். முடியுமாயின் குழிகளைச் சுற்றி பாதுகாப்பு வேலியை அமைக்க வேண்டும்.
வெட்டுக்காயங்களை ஏற்படுத்தக்கூடிய கத்தி, அலவாங்கு, மண்வெட்டி, திருகானி போன்ற ஆயுதங்களைக் குழந்தைகள் எடுத்து விளையாடும் வண்ணம் வைக்கக் கூடாது. குழந்தைகளுக்கு எட்டாத அல்லது தூரமான இடத்தில் அவற்றை வைக்க வேண்டும்.
உடைந்த கண்ணாடித்துண்டுகள், பீங்கான் கோப்பைத் துண்டுகள், சிரட்டை, பழைய முற்கம்பி, மீன், இறைச்சி எலும்புகள் போன்றவற்றை காலில் குத்தக் கூடியவாறு கண்ட இடங்களில் போடாது குப்பை மடுவில் போடவேண்டும்.
ரோஜா, போகன்விலா, கற்றானை போன்ற முற்கள் உள்ள செடிகளை குழந்தைகள் விளையாடும் இடங்களில் வளர்க்கக்கூடாது.
காய்கள், கிளைகள், ஓலைகள் என்பன மேலிருந்து விழக்கூடிய மரங்களின் அடியில் குழந்தைகள் விளையாடுவதைத் தவிர்த்தல் வேண்டும். சிறிது தட்டுப்பட்டாலும் கீழே விழக்கூடிய உயரமான மரங்களில் பூச்சட்டிகள், மீன்தொட்கள் என்பவற்றை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சமையலறையில் பிள்ளைகளுக்கு எட்டாத உயரத்தில் அடுப்பை அமைக்க வேண்டும். அது முடியாவிட்டால் அடுப்புக்கு அருகே குழந்தைகள் வராதவாறு தடைகளை அமைக்க வேண்டும். குழந்தைகள் தீக்காயங்களுக்குள்ளாதல், கொதிநீரால் தாக்கப்படல், துரும்பு கொழுத்துதல் என்பவற்றைத் தவிர்க்க இது உதவும். சமையல் முடிந்தவுடன் கேஸ் சிலின்டரை அடைத்துவிட வேண்டும்.
கொதிநீரால் பாதிக்கப்படுவதைப் போன்றே கேத்தல், பானை என்பவற்றிலிருந்து வெளியேறும் நீராவியாலும் பிள்ளைகள் காயப்பட இடமுண்டு. எனவே இதுவிடயத்திலும் கவனமாக இருத்தல் வேண்டும். பெரும்பாலான எரிகாயங்கள் மண்ணென்ணெய் விளக்குகள், குப்பி லாம்புகள் கவிழ்ந்து தீப்பிடிப்பதாலயே நிகழ்கின்றன. இதனைத் தவிர்க்க கவிழ்ந்தால் தீப்பிடிக்காத பாதுகாப்பான விளக்குகளை உபயோகித்தல் உகந்தது. விளக்குகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அல்லது அவர்கள் புழங்காத இடத்தில் வைப்பது பாதுகாப்பானது.
பிள்ளைகளைக் குளிப்பாட்ட அல்லது கழுவ கொதிநீரைத் தயார் செய்த பின்னர் பிள்ளையை அந்த இடத்தில் ஒருபோதும் தனியே விட்டுச் செல்லக்கூடாது. அப்படிப் போக நேர்ந்தால் கொதிநீரில் தண்ணீரைக் கலந்துவிட்டுப் போகவும்.
வீட்டில் புழங்கும் மின்சார உபகரணங்களில் மின்சார ஒழுக்கு காணப்படுகிறதா என்பதைக் கவனிக்கவும். மின்னழுத்தி, மின்சூடாக்கி, மின்கேத்தல், மின்னடுப்பு, ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றை குழந்தைகள் தொட்டுவிளையாடவிடக்கூடாது. அதன் இணைப்புத் துவாரங்களில் குழந்தைகள் விரல்களை விடுவதைத் தவிர்க்க வேண்டும். உபயோகிக்காத சந்தர்ப்பங்களில் அவற்றை அனைத்து களற்றிவைக்க வேண்டும்.
சிறியளவு தண்ணீரில்கூட ஒரு குழந்தை மூழ்கிவிடக்கூடும். எனவே பேசின், வாளி என்பவற்றில் தண்ணீரை நிரப்பிவிட்டு அவ்விடத்தில் குழந்தையைத் தனியாக விட்டுச் செல்லக்கூடாது. வாளியில் நீர்வைத்திருந்தால் அதில் கவனமாக இருங்கள். வெற்றுவாளியை எப்போதும் தலைகீழாகத் கவிழ்த்து வையுங்கள். மழையின் பின்னர் வீட்டுக் கான்கள், தோட்த்திலுள்ள பள்ளங்கள், குழிகளில் தண்ணீர் நிரம்பியிருக்கும் அத்தகைய இடங்களுக்கு குழந்தைகள் தனியே செல்வதை தவிக்க வேண்டும்.
கடல், ஆறு, குளம் நீரோடைகள் என்பவற்றில் குழந்தைகள் குளிக்கும்போது பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும். இந்த இடங்களில் குழந்தைகள் எக்காரணம் கொண்டும் தனியே விட்டுச் செல்லக்கூடாது.
(தொடரும்)

http://www.idrees.lk

குழந்தைகளும் விபத்தும் 2

குழந்தைகளும் விபத்தும் 2 

நீரில் மூழ்குதல், புகை விஷவாயுக்கள் உடலுட் செல்லுதல், தொண்டையில் ஏதும் சிக்கிக் கொள்ளுதல், மின்சாரம் தாக்குதல் போன்ற சந்தர்ப்பங்களில் சுவாசம் தடைப்பட இடமுண்டு. இத்தகைய சந்தர்ப்பங்களில் செயற்கைச் சுவாசம் மூலம் நோயாளியின் உயிரைக்காப்பாற்ற முடியும்.
முகம் மேலே இருக்குமாறு நோயாளியை நிமிர்த்திப் படுக்கவைக்க வேண்டும். வாய்க்குள் ஏதாவது சிக்குண்டு காணப்படின் உரனே வாயை விரல்களால் துப்பரவு செய்யவேண்டும். ஒரு கையை நோயாளியின் கழுத்துக்குக்கீழே வைத்து சிறிது நிமிர்த்தவும். அதாவது உயர்த்திவைக்கவும். மற்றக் கையை தலை உச்சியில் வைத்து முடிந்தளவு தலையை பின்னோக்கித் தள்ளவும்.
தலை மேலும் பின்னால் போகுமாறு நாடியைப் பிடித்து உயர்த்தவும். நோயாளியின் வாயை இயன்றளவு திறக்கவும். நோயாளியின் வாயிலும் மூக்கிலும் முழுமையாக உங்கள் வாயை வைத்து மூடவும். பின்னர் நோயாளியின் வாயுள் ஊதி மூச்சுக்குழாய்க்குள் காற்று நிரம்புமாறு செய்யவும். நெஞ்சுப்பகுதி விரிவடைகிறதா என்பதனை அவதானிப்பதான் மூலம் இதனை உறுதிசெய்யலாம். ஊதுவதை நிறுத்தி காற்று வெளியேறும் சப்தத்தை காது கொடுத்துக் கேட்கவும். மீண்டும் ஊதவும். நோயாளியின் வாயிலிருந்து காற்று வெளியேறாதிருந்தால் அவரின் தலை, கடைவாய் ஆகியன உரியமுறையில் இருக்கின்றனவா என்பதை கவனிக்கவும். நாக்கு தொண்டையை மறைத்துக் கொண்டிருக்கின்றதா என்பதையும் அவதானிக்கவும். நோயாளியின் தலை சிறிது பனிவாக இருக்கும் வகையில் ஒருபுறமாகத் திருப்பி இரு தோள்களுக்குமிடையே உள்ள பகுதியில் மெதுவாகத்தட்டவும். மீண்டும் ஊதவும். மூன்று விநாடிகளுக்கு ஒருமுறை ஓர் அளவான முறையில் (உரமாக ஊதாமல்) இவ்வாறு ஊதவும். நோயாளி மீண்டும் சுவாசிக்கத் தொடங்கும் வரை இவ்வாறு ஊதிக்கொண்டிருக்கவும். செயற்கைச் சுவாசம் வழங்குவதை அதுபற்றி நன்கு தெரிந்த ஒருவரே மேற்கொள்ள வேண்டும்.
சிறிதளவு இரத்தம் வந்த காயம், சிராய்ப்புகளால் ஏற்பட்ட காயம் என்பவற்றை சுத்தமான நீரில் நண்கு கழுவ வேண்டும். சவர்க்காரமிட்டுக் கழுவுவது மிகவும் நல்லது. கழுவியபின்னர் சுத்தமான ஒரு துணியால் காயத்தை மூடவும். விஷஜந்துக்கள், பாம்பு என்பன கடித்த கடிவாயையும் இவ்வாறு சவர்க்காரமிட்டுக் கழுவித் துப்பரவு செய்வது மிகவும் நல்லது. காயத்தில் மருந்து, எண்ணெய் போன்ற எதனையும் போடாது நோயாளியை உடன் வைத்தியரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
காயத்திலிருந்து இரத்தம் கொட்டும் பட்சத்தில் காயம்பட்ட இடம் உயரமாக அதாவது மேல்நோக்கி இருக்குமாறு வைக்கவும்.
இரத்தம் வழிவது நிற்கும் வரை சுத்தமான துணியால் அல்லது கையால் காயத்தை அழுத்திப்பிடிக்கவும். கால்கைகளில் பட்ட காயத்திலிருந்து இவ்வாறு இரத்தம் வெளியேறினால் துணித்துண்டொன்றினால் காயம்பட்ட இடத்திற்கு மேல்பகுதியில் ஓரளவு இறுக்கிக் கட்டிவிடவும். இதனை 10 – 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இளக்கிக் கொள்ளவும்.
கைகால்களில் எலும்புகள் முறிந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பின் பாதிக்கப்பட கை அல்லது கால் அசையாவண்ணம் ஒரு தடி அல்லது அடிமட்டை போன்ற ஒன்றை வைத்துக்கட்டிவிடவும். தோலைக்கிழித்துக் கொண்டு எலும்பு ஏதும் உடைந்து வெளியே வந்திருந்தால் அதனை உள்ளே தள்ளிவிடவும். பிரயத்தனம் செய்தல் கூடாது. அதேபோன்று உடைந்த எழும்புகளை சரிசெய்ய முனையவும் கூடாது. பொருத்தமான வைத்தியர் ஒருவரிடம் காயப்பட்டவரை உடன் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எரிகாயமாக இருந்தால் காயம்பட்ட பகுதிக்கு இயன்றளவு நேரம் சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கழுவச் செல்ல இடமளிக்கவும். அல்லது மெதுவாக கழுவி விடவும். காயத்தின் வெப்பத்தைக் குறைக்க அது உதவும். காயத்துக்கு எண்ணெயோ மருந்தோ அல்லது வேறு எதனையும் பூசவேண்டாம். காயமுற்ற குழந்தையை மிகவிரைவாக எடுத்துச் செல்ல வேண்டும்.
கண்ணுக்குள்ளே ஏதும் விழுந்துவிட்டால் கண்ணைக் கசக்கக்கூடாது. முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து அதனுள் கண்ணை விழிப்பதன் மூலம் விழுந்த பொருளை அகற்ற முயலவும். இவ்வாறு செய்யும் போது கண்ணிமையை வேண்டுமானால் உயர்த்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் மெல்லிய ஒரு துணியை எடுத்து அதன் நுனியைச் சுத்தமான தண்ணீரில் நனைத்து அதன் மூலம் கண்ணுக்குள் விழுந்த பொருளை எடுக்க முயற்சி செய்யவும். கண்ணின் கருவிழிப்பகுதிக்குள் சென்றுள்ள எவற்றையும் விரல்களால் எடுக்க முனையவேண்டும். உடனே மருத்துவ உதவியினை நாடவேண்டும்.
கொதி நீராவி, இரசாயனப் பொருட்கள், நச்சுத்திரவங்கள் ஏதேனும் கண்ணுக்குள் சென்றுவிட்டால் சிறிய ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து கண்ணுக்குள் விடவும். சிறு ரப்பர் குழாய் (இங்க் பிலர்) மூலமாகவும் இதனைச் செய்யலாம். சுமார் 15 நிமிடம் நேரம் இவ்வாறு கண்ணை நன்கு கழுவவும். கழுவும் போது பிள்ளையின் கண் இமைக்காது நன்கு திறந்துவைத்துக் கொள்ள இன்னொருவரின் உதவியைப் பெற்றுக் கொளளவும். மருத்துவ ஆலேசனை பெற்றுக் கொள்ளும் வரை கண்ணுக்குள் எவற்றையும் போட வேண்டாம்.
தொண்டையில் ஏதும் சிக்கிக் கொண்டால் குழந்தையை இருமிக்கக்குமாறு செய்ய வேண்டும். சிறுவயதுக் குழந்தையாயின் தலை கீழே இருக்கக்கூடியதாக அதாவது தலை கீழாய் பிடித்துக் கொண்டு தோள்பட்டைகள் இரண்டுக்குமிடையே முதுகில் தட்டவும். வளர்ந்த பிள்ளையாயின் தலை பனிவாக இருக்கும் வகையில்வைத்து அல்லது நீட்டிப் படுக்கவைத்து தோள்களுக்கிடையே முதுகில் சிறிது பலமாகத்தட்டவும். இல்லாவிட்டால் வயிற்றை மேல்நோக்கி அமுக்கவும். தொண்டைக்குள் விரலைவிட்டு சிக்குண்ட பொருளை எடுக்க முனையவேண்டாம்.
காது அல்லது மூக்கினுள் ஏதாவது சிக்குண்டால் அதனை எடுக்க முயலவேண்டாம். உடனே வைத்தியர் ஒருவரது உதவியை நாடவும். அத்தகைய பொருட்களை உரியமுறையில் எடுக்காது போனால் அவை மேலும் உள்ளே சென்று பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்திவிடலாம்.
பாம்பு கடித்தால் நஞ்சு உட்செல்வதைத் தாமதப்படுத்திக் கொள்வதற்காக கடிவாய்ப்பகுதி அசையாது இருக்கும் வகையில் சிறுபலகைத்துண்டு போன்ற ஒன்றை வைத்துக் கட்டவும். கடிவாய்ப்பகுதி வீங்கக்கூடாது. கையில் மோதிரம், வளையல் என்பன அணிந்திருந்தால் அவற்றை அகற்றுங்கள். காயப்பகுதியில் காணப்படக்கூடிய விஷத்தை அகற்றுவதற்கு அப்பகுதியை சவர்க்காரமிட்டு நன்கு கழுவவும்.
கடியுண்ட இடத்தை வெட்டி அல்லது கீறி இரத்தத்தை வெளியேற்ற முயலவேண்டாம். அந்த இடத்தில் வாயை வைத்து விஷத்தை உரிஞ்ச முனையவும் வேண்டாம். வேதனை காணப்படின் பரசிட்டமோல் வில்லைகளை நோயாளிக்குக் கொடுக்கவும். அஸ்பரின் மருந்துகள் கொடுக்கக்கூடாது. நோயாளியை உடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவேண்டும். கடித்த பாம்பு எவ்வகையைச் சேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளுதல் மிகமுக்கியமாகும். கடித்த பாம்பு அருகில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் சற்று மயக்கத்துடன் காணப்படும். ஏனெனில் பாம்பின் இனத்தைப் பொருத்தே சிகிச்சை அமையும்.
பிழையான மருந்துகள், இரசாயணப்பொருட்கள், நஞ்சுமருந்துகள் என்பவற்றைத் தவறுதலாக உட்கொண்டுவிட்டால் குடித்தவர் வாந்தி எடுப்பின் ஒருகிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கக் கொடுக்கவும். இது வாந்தி எடுப்பதை இலகுவாக்கும். வாந்தி எடுக்காவிட்டால் தொண்டைக்குள் விரலைவிட்டு வாந்தியை ஏற்படுத்தவும். இதனை மிகக்கவனமாக செய்ய வேண்டும். வாந்தி எடுத்தபின்னர் முடிந்தளவு தண்ணீரைக் குடிக்கக் கொடுக்கவும்.
ஆனால் மண்ணென்ணெய், பெற்றோல், அசிட்டிக் அசிட், வினாகிரி போன்ற அமிலங்களையோ, அமோனியா போன்ற காரவகைகளை குடித்திருந்தால் வாந்தி எடுக்கச்செய்யக் கூடாது.
மயக்கம், நினைவிழந்து போதல், வலிப்பு போன்றன ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் வாந்தியை ஏற்படுத்தக் கூடாது. இத்தகைய சந்தர்ப்பங்களில் தண்ணீர் குடிக்கக் கொடுக்கவும் கூடாது. ஏதும் விஷம் அல்லது இரசாயணப்பொருட்கள் உடம்பில் பட்டுவிட்டால் உடுத்திருக்கும் துணிவகைகளை அகற்றிவிடவும். பட்ட இடத்தை சவர்க்காரம் போட்டு நண்கு கழுவவும். எண்ணெய், மருந்துவகைகள் எவற்றையும் வைத்திய ஆலோசனை இன்றி பூசக்கூடாது. சிகிச்சைக்காக வைத்தியரிடம் கொண்டு செல்லும்போது உடம்பில்பட்ட மருந்தின் போத்தல் அல்லது லேபல் என்பவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். பட்டது இன்ன இரசாயனப் பொருள் என்பதை அறிந்து கொள்ள இது உதவும்.
மேலே கூறப்பட்டவை யாவும் முதலுதவியாகும். விபத்தின் சிக்கிய ஒரு குழந்தையின் உடல்நிலை எவ்வளவுதூரம் அபாயகரமானது என்பதை ஒரு வைத்தியசாலைதான் தீர்மானிக்க முடியும். எனவே விபத்திற் சிக்கிய குழந்தையை உடனடியாக வைத்தியர் ஒருவரிடம் கொண்டுசெல்வது அவசியமாகும்.
(தொடரும்)
http://www.idrees.lk

குழந்தைகளும் விபத்தும் 1


குழந்தைகளும் விபத்தும் 1

idrees.lk
குழந்தை பராமரிப்பில் பெற்றோர் விபத்துகளைப் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதும் முக்கியமாகும். விபத்துகள் தொடர்பாக இலங்கையில் மிகக்குறைவாகவே ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. வருடாந்தம் நிகழும் விபத்துகளில் பெரிதும் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர். இவ்விபத்துகளில் பெரும்பாலானவை தவறுதலாக அல்லது கவனயீனம் காரணமாக ஏற்படுகின்றன. இவற்றைக் கருத்திற் கொள்வோமாக இருந்தால் இவற்றை இலகுவாகத் தவிர்த்துக் கொள்வதற்கும் அல்லது பெருமளவு குறைத்துக் கொள்வதற்குமான அறிவை நாம் பெற்றுக் கொள்ளமுடியும்.
குழந்தைகளும் விபத்தும் என்ற இந்தத் தொடரில் குறிப்பாக வீட்டுவிபத்துகளை தவிர்த்துக் கொள்ள தற்காலிக வழிமுறைகளையும் விபத்து நிகழும் பட்சத்தில் எடுக்கவேண்டிய உடனடி நடவடிக்கைகளையும் விளக்கலாம் என நினைக்கிறேன். வீட்டு விபத்துகளில் குழந்தைகள் மரணித்தல் அல்லது அங்கவீனமடைதல் அல்லது காயப்படல் போன்றவற்றை பெருமளவு குறைத்துக் கொள்ள இவை உதவும்.
வீட்டு விபத்துக்கள் என்பது வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் (முற்றம், கலஞ்சியம், மலசலகூடம், கிணறு, மரம், கரேஜ், பாதைகள், வீட்டுத்தோட்டம் ஆகிய பகுதிகள் அடங்கும்) நிகழும் விபத்துகளைக் குறிக்கின்றது. இது நம்நாட்டில் குழந்தை பராமரிப்பில் எதிர்நோக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
வீட்டுவிபத்துகள் ஏற்படும் போது உடனடியாக உரிய முதலுதவியை வழங்குவதன் மூலம் அவற்றால் ஏற்படக்கூடிய துரதிஷ்டமான பின்விளைவுகளையும் பாதிப்புகளையும் பெருமளவில் குறைத்துக் கொள்ளமுடியும். அநேகமாக எல்லாக் குடும்பங்களிலும் இத்தகைய முதலுதவியினை வழங்கமுடியும். அவ்வாறே வீட்டுவிபத்துகளில் பெரும்பாலானவற்றை நாம் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொள்வதன் மூலம் தவித்துக் கொள்ள முடியும்.
வீட்டுவிபத்து என்பது வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் நிகழும் விபத்துகளைக் குறிக்கின்றது என்பதை ஏலவே நாம் குறிப்பிட்டோம். தொண்நூறுகளின் ஆரம்பத்தில் செய்யப்பட்ட கணிப்பீட்டின் படி வீட்டுவிபத்துகள் காரணமாக ஆண்டுதோறும் 2 முதல் 2.5 இலட்சம் பேர் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். வீடுகளில் கைமருந்து செய்வோர் தனியார் வைத்தியசாலைகளில் செல்வோரைக் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.
வீட்டுவிபத்துக்குள்ளாவோரில் அதிகமானவர்கள் குழந்தைகளாவர். இவ்விபத்துகளில் பெரும்பாலானவை சமயலறை, கிணற்றடி, மலசலகூடம், வாசல்படி, பள்ளம் படுகுழிகள், தண்ணீரோடும் கான், வீட்டுத்தோட்டம் போன்ற இடங்களிலேயே நிகழ்கின்றன. இவ்வாறு நிகழும் விபத்துகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
  • கூரான ஆயுதங்கள், உபகரணங்கள், உடைந்த பாத்திரங்கள் என்பவற்றால் ஏற்படும் காயங்கள், சிராய்ப்புகள், கீறல்கள், விழுதல், முட்டிமோதுதல், நெருக்குப்படுதல் போன்றவை காரணமாக ஏற்படும் காயங்கள், எழும்பு முறிவு, உளுக்கு, நசிவுகள் என்பன.
  • மண்ணெண்ணை விளக்கு, சுடுதண்ணீர், நீராவி மற்றும் கொதிக்கும் திரவங்கள் என்பவற்றால் ஏற்படக்கூடிய எரிகாயங்கள் கொப்புலங்கள்.
  • கிணறுகள் அல்லது நீரோடைகள், குளங்கள் போன்றவற்றில் விழுவதன் காரணமாக மூழ்குதல்.
  • மின்சாரத்தில் தாக்கப்படல்.
  • கிருமிநாசினிகள், மருந்துகள் என்பவற்றால் ஏற்படும் விபத்துகள்.
  • பாம்பு, பூரான், தேள், செவ்வால் அரணை போன்ற விஷஜந்துகள் தீண்டல்.
  • கண், காது, மூக்கு தொண்டை ஆகியவற்றுடன் ஏதேனும் பொருட்கள் விழுதல் அல்லது விழுந்து அடைத்துக் கொள்ளுதல்.
இத்தகைய விபத்துகளின் போது கை, கால், பாதம், தலை, மூக்கு, தொண்டை போன்ற உறுப்புகளே பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளுக்கு உடனடியாக பொருத்தமான முதலுதவியும் வைத்திய சிகிச்சையும் அளிக்கப்படுவது அவசியமாகும். அப்போதுதான் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படுவதையும் அல்லது அங்கவீனங்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
முதலுதவி
முதலுதவி என்பது சிகிச்சை அல்ல. மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் வரை நோயாளிக்கு நிவாரணம் வழங்கும் முகமாகவும் எதிர்வரக்கூடிய கடும் ஆபத்துக்களை குறைத்துக் கொள்ளவும் மேற்கொள்ளப்படும் ஒரு தற்காலிக நடவடிக்கை ஆகும்.
விபத்தில் சிக்கிய குழந்தையை மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வரை காற்றோட்டமுள்ள வசதியான ஓர் இடத்தில் வைத்திருக்க வேண்டும். அக்குழந்தைக்கு ஏற்பட்டுள்ள பயம், அதிர்ச்சி என்பவற்றை அகற்ற முயலவேண்டும். பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர் பயந்திருந்தால் அதைக் குழந்தைக்கு காட்டிக் கொள்ளக்கூடாது. மருத்துவ சிகிச்சையின் பின்னர் விரைவில் சுகம் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையை குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும்.
விபத்திற் சிக்கிய குழந்தை மயக்கமடைந்திருந்தால் அல்லது நினைவிழந்திருந்தால் அதனை இடப்புறமாக திருப்பி தலையைச் சிறிது பணிவாக வைத்திருக்கும் வகையில் படுக்க வைக்க வேண்டும். நோயாளி வாந்தி எடுக்கும் பட்சத்தில் அவ்வாந்தி மூச்சுக்குழாய்க்குள் செல்வதை இது தடுக்கும். இத்தகைய நோயாளிக்கு குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக்கூடாது.
பெரும்பாலான விபத்துகளின் போது ஏற்படக்கூடியது மயக்கமாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் சுத்தமான காற்றோட்டம் அவசியமானதால் நோயாளியைச் சுற்றி ஆட்கள் குழுமிநிற்பது தவிர்க்கப்படவேண்டும். தலை சற்றுப் பணிவாக இருக்கும் வகையில் குழந்தையைப் படுக்கவைக்க வேண்டும். இல்லாவிட்டால் உட்கார்ந்த நிலையில் இரண்டு முழங்கால்களுக்கிடையே தலையைக் கவிழ்த்து கீழாக இருக்கும்படி செய்ய வேண்டும்.
இடுப்பு நெஞ்சுப் பகுதிகளில் உடை நெகிழ்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காற்று வீசவும் முகத்துக்கு குளிர்ந்த நீரைதெளிக்கவும் வேண்டும். மயக்கம் தெளிந்தவுடன் சூடான பானம் ஏதாவது குடிக்கக் கொடுக்க வேண்டும்.
மயக்கத்தைப் போன்று பெரும்பாலான விபத்துக்களில் நிகழக்கூடிய மற்றொரு விசயம் அதிர்ச்சியாகும். அதிக வியர்வை, தோல் வெளிறிவிடல், நினைவிழந்து போதல் என்பன இதன் அறிகுறிகளாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் நோயாளியின் கால்கள் தலைப்பகுதியைவிட உயரமாக இருக்குமாறு படுக்கவைக்க வேண்டும். குளிரைப் போக்க துணியால் போர்த்த வேண்டும். நினைவு இருப்பின் சூடான பானத்துடன் ‘பெரசிட்டமோல்‘ போன்ற வலியைக் குறைக்கும் மருந்துகள் எதையாவது கொடுக்க வேண்டும்.
(தொடரும்)

குழந்தைகளும் பிரச்சினைகளும் 2


குழந்தைகளும் பிரச்சினைகளும் 2

idrees.lk
8 மிகையான உபதேசம்
மனித மனம் அளவுக்கு மிஞ்சிய மிகையான உபதேசத்தை வெறுக்கின்றன. அதனால் சலிப்படைகின்றன. நபிகள் கூட அளவாகவே உபதேசித்துள்ளார்கள். அவர் மணித்தியாலக்கணக்கில் உபதேசிக்கவில்லை.
9 குழநதை பற்றிய தப்பெண்ணம்
குழந்தையின் நடத்தையில் எப்போதும் தப்பெண்ணம் கொள்வதும் குழந்தையை திருத்துவதற்கான சிறந்த வழிமுறையன்று. இது குழந்தைக்கும் பெற்றோருக்குமிடையில் நம்பிக்கையின்மையை தோற்றுவித்துவிடும். இது ஊடாட்டத்திற்கான வாசலை அடைத்துவிடும். எந்தவொரு பிரச்சினையையும் பரஸ்பரம் நலலெண்ணத்தின் அடிப்படையில் சுமூகமாக தீர்க்கமுடியும். வெளியில் உள்ள ஒருவர் நமது குழந்தையைப்பற்றி சொல்லி விட்டால் நாம் தப்பெண்ணம் கொண்டு குழந்தைகளை தண்டிக்ககூடாது. நம்மோடு பல வருடங்களாக வாழும் குழந்தை வெளியாரை விட நமக்குமிகுந்த நம்பிக்கையானது என்பதை மறந்து விடக்கூடாது.
10 குற்றஞ்சாட்டல்
எப்போதும் குழந்தையை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி வைத்து விசாரிக்கும் நீதிபதி போல் பெற்றோர் மாறிவிடக்கூடாது. குற்றஞ்சாட்டுவதற்கு முன்பு நீதிபதியாய் மாறுவதற்கு முன்பு நீங்கள் ஒரு நல்ல தந்தையாக-தாயாக இருக்க வேண்டும்.
குழந்தையை பார்த்து கேட்கின்ற எல்லா கேள்விகளிலும் குற்றஞ்சாட்டும் சாயல் தொனிக்கக்கூடாது. ஏன் சுணங்கி வந்தாய் என்ற கேள்வி குழந்தையை அமைதியிழக்கச் செய்துவிடும். ஏன் சுணங்கி வந்தாய் என்று கேட்பது குற்றஞ்சாட்டுவதை போலத்தான் தப்பெண்ணத்தையும் உருவாக்கிவிடும். கேட்கும் கேள்வி உங்களுக்கும் குழந்தைக்கும் பிரிவை உண்டுபண்ணிவிடக்கூடாது. குழந்தை மனந்திறந்து கதைக்கக்கூடியதாக எமது கேள்வி அமைய வேண்டும். கேள்வியிலிருந்து விலகி பொய் சொல்லும் நிலைக்கு நமது கேள்வி அமைந்துவிடக்கூடாது
11 தண்டனை
தண்டனை ஒரு தீர்வேயல்ல. அது நோயை குறைக்கவோ டென்ஷனைக் குறைக்கவோ ஒருபோதும் உதவாது. தண்டிக்கப்படும் குழந்தை உங்கள் பேச்சை கேட்கும். ஆனால் அது தற்காலிகமானது என்பதை மறந்துவிடாதீர்கள். தண்டிக்கப்படும் குழந்தை உங்களுக்கு முன்னிலையில் ஒரு நடத்தையையும் நீங்கள் பிரசன்னமில்லாத இடங்களில் இன்னொரு நடத்தையையும் வெளிப்படுத்தும்
12 சொல்லிக்காட்டுதல்
உன்னை பெற்றெடுக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? உனக்கு உம்மா வாப்பாவுடைய பெறுமதி விளங்குதில்லையே! குழந்தையிடம் உங்கள் மகத்தான பணிகளை பயான் பண்ணிக்கொண்டிருக்கக்கூடாது இதை கேட்கும் குழந்தை உங்களைவிட்டு மெல்ல மெல்ல விலகிச்செல்ல விரும்பும். சில போது தனது தேவைக்காக தானே அவற்றை செய்துகொள்ள ஆரம்பிக்கும் அல்லது வீட்டிலிருந்து வெளியேறி சுதந்திரமாக வாழ ஆசைப்படும்.
எல்லாம் உனக்காகத்தான் செய்கிறேன் உனக்காகத்தான் கஷ்டப்படுகிறேன். உனக்காகத்தான் கிடந்து சாகிறேன் என்று உங்கள் குழந்தையைப்பார்த்து கூறாதீர்கள்.
13 நொட்டை சொல்லுதல் (விமர்சித்தல்)
குழந்தை எந்தக்காரியத்தை செய்தாலும் அதற்கு நொட்டை சொல்லுதல் கூடாது. அப்படிச் சொல்லிக்கொண்டிருந்தால் குழந்தை எந்த வேலையையும் செய்யாது காலப்போக்கில் ஒதுங்கிவிடும் தனிமையை நாடும். இவ்வாறு ஒதுங்கும் போது குழந்தை ஒன்றுமே செய்வதில்லை. சரியான சோம்பேறி என்கிறமாதிரி பெற்றோர் கதைப்பதும் உண்டு.
14 எச்சரிக்கை செய்தல்
எச்சரிக்கை செய்வதும் குழந்தையின் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை. அது குழந்தையின் மனதில் எச்சரிக்கைக்கான பைலை திறக்கப்போவதுமில்லை. உதாரணமாக புகைக்காதே புகைப்பதை நான் உனக்கு எச்சரிக்கிறேன் என்பது புகைப்பதற்கான ஒரு புதிய பைலை குழந்தையின் மூளையில் திறந்துவிடும் வார்த்தையாகும். குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் பிணக்கு வரும் போது குழந்தை புகைப்பதை நாடத்தொடங்கும். அதன் எதிர்விளைவாக குழந்தை அக்காரியத்தை செய்யத்தொடங்கும்.
15 கொச்சிக்காய் அரைத்து பூசுதல்
கட்டுக்கடங்காத குழந்தை என பெற்றோரால் இணங்காணப்படும் குழந்தையை கட்டிவைத்து அல்லது அறையினுள் போட்டு பூட்டி அம்மியில் வைத்து அரைக்கப்பட்ட கொச்சிக்காயை உடல்முழுவதும் புசி விடுகின்ற பழக்கம் முன்பு இருந்து வந்தது. இதுவும் குழந்தையின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு வழிமுறையாக கையாளப்பட்டுவந்துள்ளது. இது மிகக்கொடூரமான வழிமுறையாகும். இதயமுள்ள எந்த மனிதனும் இதை ஒரு திருத்தும் வழிமுறையாக ஏற்கவே மாட்டான்.
16 காஞ்சவோண்டி பூசுதல்
இது ஒரு செடி இலைத்தாவரம். நீளமான முக்கோணம் போன்ற இலைகள் கொண்டவை. இலைகளின் விளிம்பு அலங்காரமாக வெட்டப்பட்டது போல் இருக்கும். இந்த இலை உடலில் பட்டால் மஸ மஸ என்று கடிக்கத்தொடங்கும். பட்ட இடத்தில் சொறியச் சொறிய சிவந்து புண்ணாகிவிடும். இதவும் குழந்தைகளை திருத்துவதற்கு ஒரு வழிமுறையாக கையாளப்பட்டது. இந்த மரங்கள் அருகி விட்டதாலும் கல்வியறிவு அதிகரித்தமைனாலும் இந்த தண்டனை முறைகள் இல்லாமல் போய்விட்டது.
17 நெருப்பால் சுடுதல்
சொற்படி கேட்டு நடக்காத குழந்தைகளுக்கு ஏதாவது இரும்பை நெருப்பில் போட்டு சூடாக்கி அல்லது அடுப்பில் எரிந்து கொண்டிருக்கும் விறகை எடுத்து கையில், தொடையில் சூடு போடுதல் இதன்முறையாகும். இதுவும் பெரும்பாலும் குறைந்துவிட்டது என்று சொல்வதற்குமில்லை. கையில் சூட்டுக்காயங்களுடன் சில குழந்தைகளை நான் அண்மைக்காலங்களில் அவதானித்துள்ளேன். ‘பிரளிபன்னவும் உம்மா கையில் சுட்டுப்போட்டாங்க சேர்‘  என்று சொல்கிறார்கள். இதுவும் இஸ்லாம் வெறுக்கின்ற தண்டனை முறையாகும்.
18 துலாக்கோலில் கட்டி தண்ணீர் இறைத்தல்
துலாக்கோல் என்பது கிணற்றிலிருந்து தண்ணீரைப் பெறுவதற்காக அதற்கருகிலேயே நடப்பட்டிருக்கும் ஒரு இயந்திரம். அதன் கோல் மிக நீளமானது. அதன் அடிப்பகுதியில் குழந்தையை வைத்துக் கட்டி கிணற்றிலிருந்து தண்ணிர் இறைக்க ஆரம்பித்தால் மேலும் கீழும் குழந்தை போய் வர தலைச்சுற்று, மயக்கம், பயம் என்பன ஏற்படும். இதன்மூலம் குழந்தையை திருத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனது நண்பருக்கு நடந்த இந்த காட்சியை  நான்குழந்தைப்பருவத்தில் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன்.
(தொடரும்)

குழந்தைகளும் பிரச்சினைகளும் 1


குழந்தைகளும் பிரச்சினைகளும் 1


ஏ.பீ.எம்.இத்ரீஸ் - idrees.lk
குழந்தை வளர்ப்பில் (குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டியவர்கள் அல்ல வளரவேண்டியவர்கள்) பிரச்சினைகளைக் கையாள்வது எப்படி? என்பது நமக்கு முன்னாலுள்ள மிகப்பெரும் சவாலாகும் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றோமா அல்லது உணர்ச்சி வசப்பட்டு கோபமடைந்து குழந்தையை தண்டிக்கப்போகின்றோமா என்பதுதான் நாம் தீர்மானிக்க வேண்டியதுதாகும்.
தயாராக இருங்கள்
நீங்கள் பிரச்சினையை தீர்க்கப்புறப்பட்டால் என்ன நடக்கும்? நாம் கூறப்போகும் அணுகுமுறையைப் பயன்படுத்தினால் நீங்கள் டென்ஷனிலிருந்து விடுபடுவீர்களா? மிகமுக்கியமான அணுகுமுறை என்ன தெரியுமா?  பிரச்சினை மீதுதான் நீங்கள் கவனக்குவிப்பை செலுத்த வேண்டுமே தவிர குழந்தை மீதல்ல. பிரச்சினைக்குரிய குழந்தையின் பிறழ்வு நடத்தைக்கு முன்னால் நீங்கள் எப்படி நடந்து கொள்ளப்போகிறீர்கள் என்பதுதான் அது.
பிரச்சினையைத் தீர்ப்பதில் நீங்கள் கவனத்தை குவிக்கும் போதுதான் திரும்பத் திரும்ப அதே பிரச்சினை வரும்போது ஒரு நல்ல பயிற்றுவிப்பாளராக இருந்து பிரச்சினையை தீர்க்க முடியும். எப்போதும் பிரச்சியையைத்தீர்த்து குழந்தையை நடத்தை பிறழ்விலிருந்து காப்பாற்றலாம். அதற்கு இரண்டு பண்புகள் பெற்றோருக்கு அவசியமாகும். ஒன்று பொறுமை. இரண்டு சகிப்புத்தன்மை. நபிகள் இதனை பல இடங்களில் வலியுறுத்தியுள்ளார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை நீங்கள் வாசிக்க வைத்திருக்கும் செய்திப்பத்திரிகையைக் கிழித்தால் என்ன செய்வீர்கள்? ஆ… ஓ… கிழிக்காதே! என்று கத்திக்கொணடு குழந்தையை திட்டுவீர்களா? முதுகில் அடிப்பீர்களா? அல்லது தொடர்ந்து இந்நடவடிக்கையிலிருந்து குழந்தையை எவ்வாற தடுக்கலாம் என்பது பற்றி சிந்திப்பீர்களா? உணர்சிவசப்பட்டு ஏசினாலோ குழந்தையை அடித்தாலோ உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான சுமுகமான உறவு அற்றுப்பேய்விடும். அதற்குப் பின் குழந்தையுடன் உடையாடல் சாத்தியமில்லை.
அன்பை வெளிப்படுத்துங்கள்
பிறழ்வு நடத்தைகளை காணும் போது நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு விடலாம். எனவே பிரச்சினையை தீர்ப்பதில் கவனத்தை குவியுங்கள். குழந்தை மீதல்ல இநத நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துவதற்காக கோபத்தை கட்டுப்படுத்த முடியாது போனாலும் பின்வரும் காரியங்களை அவசரமாக செய்யுங்கள்
  1. உங்கள் குழந்தையை நேக்கி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். ஜ லவ் யு என்று செல்லுங்கள் அல்லது குழந்தையை அணையுங்கள் அல்லது அணைத்து முத்தமிடுங்கள்.
  2. எல்லாப்பிரச்சினைகளையும் தீர்க்கலாம் தீர்க்க முடியாத பிரச்சினையில்லை என்று அடிக்கடி மனதால் கூறுங்கள்
  3. ம்… ம்… கோபம் வெடித்து விடலாம். கோபம் வெடித்தால் அபாயகரமானது. எனவே நான் கட்டப்போகிறேனா அல்லது உடைக்கப்போகிறேனா என்று உங்கள் உள்மனதிடம் அடிக்கடி கேட்டுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் முதலில் மானசீகமாக நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாரம்பரிய வழிமுறைகள்
பொதுவாகவும் குறிப்பாகக் குழந்தைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொன்று தொட்டு சில வழிமுறைகளை கையாண்டு வருகின்றோம். அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வழி முறைகளாகும்.
1 சத்தம் போடுதல்
சத்தம்போட்டு அல்லது அதட்டிக் கத்துவதால் இரு தரப்பினருக்கிடையிலான தொடர்பாடலையும் புரிந்துணர்வையும் கெடுத்துவிடும். குழந்தை இந்த சத்தத்தில் தற்காப்புநிலை நோக்கி நகரக்கூடும். அதிகரித்த சத்தத்தில் பயப்படவும் கூடும். எதிர்பாராத காரியங்களைச்செய்து தன்னைப்பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். எனவே இந்தக் கத்தல் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை.
சத்தம் போட்டுக்கத்துதல் குழந்தையை அணுகுவதற்கான மிகமோசமான அணுகுமுறையாகும். அடிப்பதைவிட இது மிக மோசமான விளைவுகளை எற்படுத்துகின்றன. குழந்தை வளர்ந்தபின் இந்த சத்தத்தை கேட்டாலும் குழந்தைப் பருவ உணர்ச்சிகளையே அடைவதாக உளவியலாளர்கள கூறுகின்றனர்.
டேய்… தொடாதே! டேய்… எடுக்காதே! என்ற வார்த்தைகளை உதாரணமாக குறிப்பிடலாம்.
2 கண்டித்தலும் குறைகூறலும்
அதிகரித்த கண்டித்தலும் குறைகூறலும் உள்ளங்களை வெறுக்கச் செய்யும். உறவுகளையும் தொடர்புகளையும் பிரித்துவிடும். உள்ளங்களை தூரமாக்கி விடும். இரு தரப்பினருக்குமிடையிலான நல்லென்னங்களையும் அழித்து விடும்.
3 எதுக்கெடுத்தாலும் கட்டளை பிறப்பித்தல்
எடுத்ததற்கெல்லாம் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தால் குழந்தையும் கட்டளைக்கு ஏற்ப  இயங்கும் இயந்திரமாக மாறிவிடும். ஆளுமை செயலற்று குன்றிவிடும். எந்தவித சுயவிருப்பு வெறுப்பும் அற்ற ஜடப்பொருளாக / அடிமையாக மாறிவிடும்.
4 அச்சுறுத்தல்
நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது மென்மையாகவோ, வண்மையாகவோ அச்சறுத்துவதாலும் பிரகச்சினையைத் தீர்க்க முடியாது அல்லது பிறழ்வான நடத்தையை விட்டு கழந்தையை அப்புறப்படுத் முடியாது. அச்சுறுத்துவதால் இந்நடத்தையை குழந்யை விட்டுவிடும் என்று நீங்கள் கருதினாலும் அது தற்காலிகமானது என்பதை மறந்துவிடாதீர்கள். அச்சுறுத்துவதால் குழந்தைக்கு பயம் வருகிறதே தவிர உள்ளார்ந்த துண்டுதலால் அல்ல என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.
5 பழித்தல்
ஏளனம் செய்தல், பழித்தல் குழந்தையின் தன்னம்பிக்கையை அப்புறப்படுத்தி விடுகின்றது. பிறழ்வான நடத்தையிலிருந்து விடுபடுவதற்கான ஆற்றலை இழந்து விடும். ஏளனம் செய்தல் குழந்தையின் அனைத்து ஆளுமைப்பெறுமானங்களையும் உடைத்து நொறுக்கி விடுகின்றது. குழந்தை சுற்றியிருக்கும் சூழலோடு ஒட்டி உறவாட, ஊடாட முடியாதவாறு செய்துவிடுகின்றது. இதனால் குழநதை சூழலிலிருந்து அன்னியப்பட்டுவிடும்.
6 ஏசுதல்
வசைகளைச்செல்லி குழந்தையை திட்டுவது ஏசுவது அப்பண்புகள் குழந்தையின் உள்ளத்தில் பதியச்செய்துவிடுகின்றன. கழுதை, கெட்ட ராஸ்கல், படுவா போன்ற சொற்கள் குழந்தையின் மனதை கடுமையாக பாதிக்கக்கூடும்.
7 ஒப்பிடுதல்
ஒருபோதும் உங்கள் குழந்தையை அடுத்த குழந்தையுடன் ஒப்பிடாதீர்கள். அடிப்படையில் இரு நபர்களை ஒப்பிடுவது கூடாது. அது விஞ்ஞான பூர்வமானது அல்ல. அது அறிவார்ந்ததும் அல்ல. பொதுவாக ஒப்பிடு செய்தல் இரு நடத்தைகளுக்கிடையில், இரு நிலைப்பாடுகளுக்கிடையில் வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஒரு குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிடும் போது அந்தக்குழந்தையின் தன்னாற்றல், தன்னம்பிக்கை அப்படியே பிடுங்கப்பட்டுவிடுகிறது. ஒப்பிடப்படும் அடுத்த குழந்தையைப்போல் தான் இல்லை என நினைத்து அது தோல்வி மனப்பான்மையில் வாழ்கிறது.
(தொடரும்)

சனி, 10 ஏப்ரல், 2010

மீண்டும் ‘இடி அமின்’ சிறிலங்காவில் ஆட்சிபீடம் ஏறுகிறார்





நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போதைய சிறிலங்கா அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ”எந்தவழியை” பயன்படுத்தியேனும் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உண்டு. குறிப்பிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்கப்படுவார்கள் என்று கூட அமெரிக்கா உயரதிகாரி ஒருவர் அண்மையில் கருத்துவெளியிட்டிருந்தார். இவ்வாறான பின்னனியில் சிறிலங்கா அரசியலின் உள் நிலமைகள்பற்றி ஆராய்கிறார் நாலக குமாரசிங்க.

‘சிறிலங்காவில் விருப்பு வாக்கு முறைமை மூலம் இறுதியாக இடம்பெறுகின்ற இறுதித் தேர்தல் இதுவாகவே இருக்கும்’, என போக்குவரவுத் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அண்மையில் மகாவலி நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னரே அதன் முடிவை அரசாங்கம் அறிந்துள்ளது என்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் ஏப்ரல் 8 ஆம் திகதி அன்று நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்குத் தீர்மானித்திருக்காவிட்டால், தற்போதுள்ள விருப்பு வாக்கு முறைமையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதென்பது அதற்கு சாத்தியமற்றதென அவர்கள் கூறுகின்றனர். அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு அத்தகைய பெரும்பான்மை அவசியமாகும்.

மகிந்த ராஜபக்ச பதவி ஆசையால் பீடிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அரசதலைவர் தேர்தலில் வெற்றிகொண்ட பின்னர், அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களே பிரதமர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிறிலங்கா அரசதலைவர் தனது மகன் நாமல் ராஜபக்சவை குடும்ப வாரிசாக அரசியலில் அறிமுகம் செய்துள்ளார். நிறைவேற்று அதிகாரமுள்ள அரசதலைவர் முறைமையையும் விருப்பு வாக்கு முறைமையையும் நீக்குவதற்கேற்ற முறையில் அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கே அரசாங்கம் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்புகிறது. ஆளுங் கட்சியின் எல்லா பிசாசுகளும் நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவர் ஊடாகவே வருவதாக வாக்காளர்கள் நம்பவைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவிலுள்ள மக்கள் ஏற்கனவே ராஜபக்சவை ‘இடி அமின்’ என்றும் ‘சர்வாதிகாரி’ என்றும் அழைக்கத் தொடங்கிவிட்டனர். அநேகமாக சர்வாதிகார ஆட்சியின் கொடூரத்தை அவர்கள் உணர்ந்திருக்கக்கூடும். ஆனால் அது இன்னமும் முழுமையாக வெளிக்காட்டப்படவில்லை

கொழும்பு, வாட் பிளேசில் அமைந்துள்ள பிரத்தியேக வாசஸ்தலத்திற்கு முகவரியிட்டு, 1983 இல் சிறிலங்கா அரசதலைவர் ஜெ.ஆர் ஜெயவர்த்தனவுக்கு நான் எழுதிய அநாமதேயக் கடிதத்தில் அவரை இடி அமின்’ என்று குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் அவர் தேசியம் என்ற ஆடையை அணிந்திருந்த ஒரு சர்வாதிகாரி என்றவகையில், எவருமே இதனை வெளிப்படையாகத் துணிந்திருக்கமாட்டார்கள். ஆச்சரியம் தரும்வகையில், ஒரு வாரத்திற்குப் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் ‘மக்கள் இப்போது என்னை சர்வாதிகாரி என்று அழைக்கிறார்கள்’, என்று குறிப்பிட்டார்.

ஜே.ஆர் ஜெயவர்த்தன நாடாளுமன்றத்தில் ஐந்திலொரு பெரும்பான்மை பலத்துடன் 1977 இல் ஆட்சிக்கு வந்தபோது, நான் பேராதனை பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். ஜே. ஆரின் ஆதரவாளர்கள் அவரது எதிராளிகளைக் கொன்றும் அவர்களது வீடுகளை எரித்தும் அவரது வெற்றியைக் கொண்டாடினார்கள். அதற்குக் காரணமும் வைத்திருந்தார்கள். 1970 இல் அவருக்கு முன் பதவிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் வலியுறுத்தினார். பிரித்தானிய ஆட்சியிசியாளர்களிடமிருந்து உண்மையான சுதந்திரத்தினை நாட்டுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக நாட்டினது அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவரும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பண்டாரநாயக்க பெற்றிருந்தார். இரண்டாவது தடவையாக நாட்டினது பிரதமாராக சிறிமாவோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு வருடத்தின் பின்னர், சிறிமாவோ பண்டாரநாயக்கவினது அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி வெடித்தபோது அவர் தனது இராணுவ இயந்திரத்தினைக் கட்டவிழ்த்துவிட்டார். 17,000 பேர் கொல்லப்பட்டார்கள். 20,000 பேர் கைதுசெய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறகக் கொல்லப்பட்ட மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களே. பிரித்தானியர்கள் சிறிலங்காவினை ஆண்ட 150 வருட காலத்தில்கூட இதுபோன்றதொரு படுகொலை இடம்பெற்றதில்லை.

ஊரடங்கு உத்தரவு தொடராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் கிராமங்களுக்கு வரும் பொலிசாரும் இராணுவத்தினரும் சந்தேகத்திற்கிடமாவர்களைக் கொலைசெய்த மற்றும் இழுத்துச்சென்ற அந்தப் பயங்கரமான எனது சிறுவயது அனுபவத்தினை நினைத்துப் பார்க்கிறேன். கிளர்ச்சியாளர்கள் காடுகளுக்குள் சென்று மறைந்துகொள்ள, கிராமங்களில் வசித்த அவர்களது உறவினர்கள் படையினரால் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்களது உடமைகள் எரியூட்டி அழிக்கப்பட்டன. குறிப்பிட்ட சில மக்கள் உயிருடன் எரித்துக் கொலைசெய்யப்பட்டார்கள்.

ஓர் சர்வாதிகாரிபோல நாட்டினை ஆண்ட பண்டாரநாயக்கா
அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்த அந்தக் காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஓர் சர்வாதிகாரி போலவே நாட்டினை ஆண்டுவந்தார். பொதுக்கூட்டங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் என அனைத்துமே தடைசெய்யப்பட்டன. சில ஊடக நிறுவனங்களும் பத்திரிகைகளும் மூடப்பட்டன. நாட்டினது மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமாக இருந்த ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டது. ஓர் இராணுவ ஆட்சியின் கீழ் வாழுவதைப் போலவே மக்கள் தங்களது நாட்களை ஓட்டினர். சிறிமாவோ எதனைச் சொல்கிறாரோ அதற்கு ஆமாம் போடுபவர்களாகவே அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். தர்மசிறி பண்டாரநாயக்கா மற்றும் சைமன் நவகத்தகம போன்ற முன்னணி நாடகக் கலைஞர்கள் “ஏக அதிபதி“ மற்றும் ‘சுய பாசா(Suba Yasa)’ போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்கள்.

எந்தவிதமான மக்கள் ஆணையுமின்றி சிறிமாவோ மேலும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் தொடர்ந்தார். பெரதெனியா பல்கலைக்கழக மாணவர்களின் மீது பொலிசார் தாக்குதல்களை நடாத்தியதைத் தொடர்ந்து சிறிமாவோவினது ஆட்சி குலைந்துபோனது. இவ்வாறாக ஒரு பேய்க்குணத்தினைத் தன்னகத்தே கொண்டிருந்த சிறிமாவோ, ‘போரற்ற இந்து சமூத்திரப் பிராந்தியம்’ ஏற்படுத்தப்படவேண்டும் என வாதாடினார். சிறிமாவோவின் பிரச்சார இயந்திரங்கள் அவரை ஓர் ‘அமைதியின் தூதுவராகவே’ சித்தரித்தன.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸ் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னர் அவரது அரசாங்கம் வீழ்ச்சி கண்டது. அத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அதேவேளையில் ‘போர் அற்ற இந்து சமுத்திரத்தை’ உருவாக்கவுள்ளதாக அவர் பிரசாரம் செய்துகொண்டார். அவரது பிரசார இயந்திரம் அவரை ஒரு ‘சமாதான தூதுவராக’ வர்ணித்தது. ‘உக சமாதான தூதுவர்! எங்களின் கொலையாளி!’, பேராதனை பல்கலைக்கழகத்தில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கும்போது, இந்து சமுத்திரம் போரற்ற வலயமாக விளங்கட்டும்’ போன்ற சுலோகங்களை மாணவர்கள் தாங்கிச் சென்றர். எதிர்க் கட்சிகள் அவரது ஆட்சியை ‘எழு வருடங்களுக்குத் தம்மைப் பீடித்த ஒரு பீடையாகவே’ கருதினர்.

ஜே ஆர் தலைமையிலான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த சந்தர்ப்பத்தை புத்திசாதுரியமாகப் பயன்படுத்தி ‘நீதியானதும் நேர்மையானதுமான ஒரு சமூகத்தை’ உருவாக்குவதாக வாக்குறுதியளித்தது. அவர் அவசரகாலச் சட்டமின்றி சனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று கோரினார். பாராளுமன்றத்தில் ஐந்திலொரு பெம்பான்மையுடன் ஐக்கியதேசியக் கட்சி எதிர்பார்க்காத அளவு வெற்றியைப் பெற்றது. ஆனால் என்ன நடந்தது? தான் நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவராக வரக்கூடிய வகையில் ஜே. ஆர் அரசியலமைப்பை மாற்றி அமைத்தார். மக்கள் அவராவது ஏதாவது செய்யவேண்டும் என எதிர்பார்த்த, சிறிமாவோ பண்டாரநாக்காவினால் உருவாக்கப்பட்ட பொதுமக்களின் உரிமைகள் தொடர்பான சரத்தை அவர் இல்லாது செய்தார். ‘தனது பாராளுமன்றத்தால் ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர எதனையும் செய்ய முடியும்’ என அவர் வீம்புரைத்துக் கொண்டார். ஆனால் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் குறைக்குமாறு எதிர்க் கட்சிகள் அவருக்கு சவால் விடுத்தன.

பண்டாரநாயக்க மற்றும் சேனநாயக்க குடும்ப ஆட்சிகளை அவர் வெறுத்தார். அவருக்கும் தற்போதைய அதிபர் ராஜபக்ச போன்று பதவி ஆசை இருந்தது. அபார வெற்றிக்குப் பின்னரும் அவரது பேச்சுக்களை கேட்குமளவுக்கு மக்களுக்குப் பொறுமை இருக்கவில்லை. ஆனால், பெருமளவு மக்களாணையுடன் வெற்றி பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்தை அமைப்பது என்பதையே அவர் உறுதிப்படுத்திக்கொண்டார். புராதன அரசர்கள் தமது குடிமக்களுக்கு உரையாற்றும் புனித பல் வைக்கப்பட்டிருக்கின்ற பத்திரிப்புவ எனும் இடத்தில் தனது வெற்றி உரையை ஆற்றுவதற்காக அவர் காத்திருந்தார். கண்டியில், வீதிகள் யாவும் அரசாங்கத்தாலும் அதன் ஆதரவாளர்களாலும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. அவரது மனநிலையைப் புரிந்துகொண்ட சில அமைச்சர்கள் அவர் மன்னராக முடிசூடிக் கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கினர். (ராஜபக்சவின் பிரசார இயந்திரமும் சில விடயங்களில் ஜே. ஆர் இனது நடவடிக்கைகளை ஒத்திருந்தன. விடுதலைப்புலிகளை வெற்றிகொண்ட பின்னர், உத்தியோகபூர்வமின்றி அவருக்கு சிறந்த அரசன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவருக்கு ‘மகிந்து VII அரசன்’ என்ற பட்டமும் அவரது ஆதரவாளர்களால் வழங்கப்பட்டது.)

ஜே. ஆர் அரசாங்கத்தை அமைத்த சிறிது காலத்தினுள்ளேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டு அவர்களது சொத்துக்களும் எரிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சமும் வன்முறைகளுமே விடுதலைப்புலி பயங்கரவாதத்தைத் தோற்றுவித்த விதைகள். 1982-1984 இல் நான் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினேன். ஜே.ஆர் இனுடைய இராணுவம் எப்படி நடந்துகொண்டது என்பதை நான் அங்கு கண்டேன். எந்தவொரு ஆக்கிரமிப்பு இராணுவத்தையும்விட மோசமாக அவர்கள் நடந்துகொண்டார்கள். இராணுவத் தொடரணிகள் வருகின்றபோது, யாழ்-வவுனியா வீதியில் பயணிக்கின்ற அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தத் தவறினால், கீழ்த்தரமான தண்டனைகளைப் பெறவேண்டும். ஒரு தடவை பேருந்து சாரதி ஒருவரை பேருந்திலிருந்து கீழே இழுத்து விழுத்தி பேருந்திலிருந்த மக்களுக்கு முன்னால் இராணுவத்தினர் அடிப்பதைக் கண்டேன். ‘அவன் ஒரு அப்பாவி மனிதன். அவ்வாறு அடிக்காதீர்கள்’, என நான் சிங்களத்தில் கத்தினேன். பின்னர் அந்தப் படையினன் அடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

படைத் தொடரணிகள் வரும்போது நிறுத்தாத வாகனங்களின் கண்ணாடிகளை உடைப்பதற்கென படையினர் எப்போதும் கைகளில் மரக் கட்டைகளை வைத்திருப்பர். 1983 இல் விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கையிலெடுத்தபோது, நாடு தழுவிய ரீதியிலான சமூகக் கலவரத்திற்கு அரசாங்கம் ஆதரவளித்தது. தமிழர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களில் இணைந்துகொண்டனர். தனக்கெதிரான எதிர்ப்பை அடக்குவதற்கு ஜே.ஆர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். சமூக அமைதியையும் தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதையும் வலியுறுத்திய அரசியல் கட்சிகள் வன்முறைக்குத் துணைபோவதாகத் தடை செய்யப்பட்டன. அதேவேளையில், பொன்சேகாவின் விடுதலைக்குக் குரல்கொடுக்கும் மக்களி விடுதலை முன்னணியும்(ஜேவிபி)தலைமறைவாகும் நிலை ஏற்பட்டது. இவ்வாறே ஜே ஆர் இரண்டு உள்நாட்டு யுத்தங்களைத் தோற்றுவித்தார்.

1984 இல் ஒரு நாள் நான் யாழ் நகர மத்தியில் நின்றுகொண்டிருந்தபோது, சிறிலங்கா விமானப்படையினர் மக்களைக் கொன்றுவருவதாக சத்தத்தைக் கேட்டு மக்கள் சிதறி ஓடினர். ஒரு மணிநேர்ததின் பின்னர், சிங்கள ஆசிரியர் ஒருவரின் தாயார், பயத்தால் நடுங்கிக்கொண்டே பாடசாலைக்கு வந்தார். ‘நான் சுண்ணாகம் சந்தையடியில் நின்றிருந்தேன். வான்வழி வந்த படையினர் கண்மூடித் தனமாக மக்கள்மீது தாக்குதல் நடாத்தினர். பலர் கொல்லப்பட்டனர். அவர்களுள் பாடசாலை சிறுவர்களும் அடங்குவர். கர்ப்பிணித் தாய் ஒருவர் மோசமாகக் காயமடைந்துள்ளார்’, என்று கூறினார். அன்று மாலை அரச வானொலியில்: 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. மறுநாள் யாழ் நகரில் இந்தக் கொலைகளைப் பார்த்து புத்தர் கண்ணீர் வடிப்பதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டேன். இதனாலேயே ஜே. ஆர் ‘இடி அமின்’ என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவர்.

பணவீக்கத்தின் காரணமாக தொழிலாளர்கள் 300 ரூபா(8 டொலர்) சம்பள உயர்வு கோரியபோது, அரசாங்கம் 100,000 மேற்பட்ட தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. ஊடகங்கள் அச்சுறுத்தப்பட்டு செய்திகளும் தணிக்கைகக்கு உள்ளாக்கப்பட்டன. ‘வுhந வுசரவா’ போன்ற சில பத்திரிகைகள் வெற்றிடங்களுடன் வெளிவந்தன. சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்குப் பச்சைக்கொடி காட்டியவேளையில், மரண தண்டனை வழங்கப்படுவதை அவர் இடைநிறுத்தினார். எனினும், ஜே ஆரினுடைய பிரசார இயந்திரம் அவரை ஆசியாவின் தலைசிறந்த அரசியல்வாதி என்று புகழாரம் சூட்டியது. இதன் பிரதிபலன்கள் வித்தியாசமாக இருந்தன. பாராளுமன்றத்தில் அவர் ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்தபோது குண்டு ஒன்று வெடித்தது. அவர் உயிர் தப்பினார். 1987 இல் ஜே ஆர் இந்தியாவுடனான அமைதி உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு அதன் விளைவாக இந்திய இராணுவம் வந்திறங்கியது.

கடைசியில் அவர் போய்விட்டார். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அதிபர் பிறேமதாச ஜே ஆர் உருவாக்கிய பாரங்களை சுமந்தார். அவர் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு உள்நாட்டு யுத்தங்களை எதிர்கொண்டார். ஜேவிபி யின் ஆயுதப் போராட்டத்தை பிறேமதாச அரசாங்கம் 1989 இல் அடக்கியது. கட்சித் தகவல்களின்படி, அரசாங்கம் 100,000 இற்கு மேற்பட்ட அதன் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொன்றுகுவித்தது. அந்த சூழ்நிலையில், அமைச்சரவை அதற்கு இரத்தத்தை விலையாகக் கொடுக்கவேண்டியிருந்தது. அதிபர் பிறேமதாச மற்றும் ஜே ஆரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் சிலர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர். இந்தக் குழப்பத்திற்கு அரச பயங்கரவாதத்தின்மீது குற்றஞ் சாட்டவேண்டும். எனது பார்வையில் ரஜீவ் காந்திகூட ஜே ஆர் ஏற்படுத்திய சூழ்நிலையின் பலிக்கடாவே. உத்தியோகபூர்வ தகவல்களின்படி, 26 வருட கால யுத்தத்தில் 80,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

‘எமக்கு ஒரு சர்வாதிகாரி வேண்டுமா அல்லது சனநாயகம் வேண்டுமா?’ என சிறிலங்கா வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு இரு முறையல்ல, பலமுறை சிந்தித்திருக்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் இரத்த ஆறு ஓடுவதும் தொடரும். அரசாங்கம் விருப்பு வாக்கு முறைமையை நீக்குவதாக வாக்குறுதியளித்திருக்கிறது. தற்போதைய முறைமையின்படி, தனக்கு விருப்பமான ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்குப் பாராளுமன்ற உறுப்பினருக்கு உரிமை உள்ளது. இது இல்லாவிட்டால், கட்சியின் தலைமைப் பீடமே உங்களுக்கான தெரிவுகளை வழங்கும். அது சர்வாதிகார ஆட்சி முறைமையை நோக்கிய ஒரு நகர்வாகும். தசாப்தங்களாகக் கிடைத்த பயங்கர அனுபவங்களுக்குப் பின்னர் மக்கள் சனநாயக சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். சிறந்த ஆட்சி முறைமைக்கு பலமான எதிர்க்கட்சியும் அவசியமாகும்.
மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் முறைமையை ஒழிக்க விரும்பினால் எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்கும் என நான் நம்புகிறேன். நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் முறைமையை ஒழிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருந்தபோதும் சிறிலங்கா அரசதலைவர் சந்திரிகா குமாரதுங்க தனது அதிகாரங்களை இழப்பதற்கு விரும்பவில்லை.

இக்கட்டுரை லங்காஇநியூஸ் என்ற இணையதளத்தில் வெளிவந்த Idi Amin returns ‘as Asian leader’ என்ற கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்.

முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பார்வை

M. ஷாமில் முஹம்மட்
Lankamuslim.org  .
ஏழாவது பாராளுமன்றத்திற்கு  உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடை பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -20 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளின் படி-  பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களில்  225 உறுபினர்களுக்கான  தேர்தல் வியாழனன்று நடத்தப்பட்டது. ஆயினும்  20 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளே வெளியிடப்பட்டன. திருகோணமலை, நாவலப்பிட்டி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை 35 வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவு செய்வதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்களை வாக்கெடுப்பின் மூலமாகவும் 29உறுப்பினர்களை தேசியப் பட்டியல் மூலமாக வும் தெரிவுசெய்வதற்காக ஒரு கோடியே நாற்பது லட்சம் வாக்காளர்கள் பதிவாகினர்  இதில் 36 அரசியல் கட்சிகள் மற்றும் 301 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 7620பேர்   தேர்தலில் போட்டியிட்டனர் வாக்காளர்களுக்கு  11875 வாக்களிப்பு நிலையங்கள்  வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்யபட்டிந்தது

அறிவிக்கப்பட்ட 20 மாவட்டங்களிலும் 117க்கும் அதிகமான ஆசனங்களை ஐ.ம.சு.மு  வெற்றி பெற்றுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் ஆசனங்கள் உள்ளடங்கலாக 46 ஆசனங்களை  கைப்பற்றியுள்ளது . வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி 12 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஜனநாயக தேசிய முன்னணி ஐந்து ஆசனங்களை  பெற்றிருக்கிறது.

கடந்த பாராளுமன்றத்தில் 225 உறுபினர்களில் 25 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தார்கள்  51  கபினட்  அமைச்சர்களை  கொண்ட அமைச்சரவையில் ஐந்து முஸ்லிம்கள்  கபினட் அமைச்சர்ளாக அங்கம் வகித்தார்கள் , 39 கபினட் அந்தஸ்து அற்ற அமைச்சர்களை  கொண்ட அவையில் ஐந்து  முஸ்லிம்கள்  கபினட் அந்தஸ்து அற்ற அமைச்சர்களாக அங்கம் வகித்தார்கள் மேலும் 19 பிரதி அமைச்சர்களை கொண்ட அவையில் ஐந்து முஸ்லிம்கள் அங்கம் வகிதுள்ளார்கள் கடந்த பாரளுமன்றத்தின் ஊடாக கிட்டதட்ட 15 அமைச்சர்கள் அங்கம் வகிதுள்ளார்கள் ஆக கடந்த முறை 25 பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தார்கள் அவர்களில் 15 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள் இதை வாசிபவர்களுக்கு ஒரு கேள்வி எழும்பும் இவ்ளவு பேர் இருந்து முஸ்லிம் சமுகத்துக்கு எதை செய்தார்கள் ??? அந்த கேள்விக்கு விடையை பின்னர் பார்போம் -

கடந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த ஐந்து முஸ்லிம் கபினட் அமைச்சர்கள் அவர்களின் விபரம்

1.A.H.M.பௌசி- பெற்றோல் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்
2.பேரியல் அஸ்ரப் - வீடு அமைப்பு அமைச்சர்
3.A.L.M.அதவுல்லா- நீர் வழங்கல் வடிகாலமைப்பு
4.ரிஷாத் பதியுதீன்- மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள்
5.M.H.முஹமத்- பாராளுமன்ற விவகாரம்

கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த , கபினட் அந்தஸ்து அற்ற ஐந்து முஸ்லிம் அமைச்சர்கள் அவர்களின் விபரம்
1.M.N.அப்துல் மஜீத் -கூட்டுறவு
2.S.அமீர் அலி - அனர்த்த நிவாரணம்
3.சேகு இஸ்ஸத்தீன்- ஏற்றுமதி அபிவிருத்தி
4.S.நிஜாமுதீன்- புகையிரதம்

கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஐந்து முஸ்லிம் பிரதி அமைச்சர்கள் அவர்களின் விபரம்

1.பைசர் முஸ்தபா -சுற்றுலாத்துறை
2.M.M.முஸ்தபா-மயோன் முஸ்தபா -உயர்கல்வி
3.A.K பாயிஸ்-கால் நடை அபிவிருத்தி
4.M.C.முஹமத் பைசல் -விஞ்ஞான தொழில்நுட்பம்
5.ஹுசைன் பஹிபிலா-வெளி நாட்டு விவகாரம்


கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 25 முஸ்லிம் உறுப்பினர்கள் இடம்பெற்ற னர்

1.A.H.M.பௌஸி
2.பேரியல் அஸ்ரப்
3.A.L.M.அதவுல்லா
4.ரிஷாத் பதியுதீன்
5.M.H.முஹமத்
6.M.N.அப்துல் மஜீத்
7.S.அமீர் அலி
8.சேகு இசத்தீன்
9.S.நிஜாமுதீன்
10.பைசர் முஸ்தபா
11.M.M.முஸ்தபா
12.A.K. பாயிஸ்
13.ஹுசைன் பஹிலா
14.A.R.அஞ்சான் உம்மா
15.A.R.M.அப்துல் காதர்
16.அலி ஹசன்
17.பைசல் காசிம்
18.அப்துல் ஹலீம்
19.ரவுப் ஹகீம்
20.கபீர் ஹாசிம்
21.R.M.இமாம்
22.M.M.மஹ்ரூப்
23.M.முஸாமில்
24.A.M.M.நௌசாத்
25.ரஜாப்தீன் முஹமத்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 'மஹிந்த சிந்தனை ல் குறிப்பிட்டுள்ளது போல் அமைச்சவையை தெரிவு செய்ய நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. அமையவுள்ள அமைச்சரவை மிகச் சிறிய எண்ணிக்கையை கொண்டதாகவே அமையும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். முழு தேர்தல் முடிவுகளும் வெளிவந்த பின்னர் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் எத்தனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளார்கள் எத்தனை பேர் தெரிவாக விலை எத்தனை புதிய முகங்கள் தெரிவாகியுள்ளன முஸ்லிம்கள் எத்தனை அமைச்சுகளை பெற போகின்றார்கள் என்பதை பார்போம் நடைமுறை அரசியலை விளங்கி கொள்ளவேண்டும் என்பதற்காக மட்டும்தான் இந்த ஆக்கத்தை தருகின்றேன்