செவ்வாய், 21 ஜூலை, 2009

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணம்!

அரிய வானியல் அதிசயங்களுள் ஒன்றான மிக நீண்ட முழு சூரிய கிரகணம், 22.07.09 அன்று ஏற்படுகிறது. அது மட்டுமல்ல 21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணமும் இதுதான். ஜூலை 22 அன்று ஏற்படும் இந்த முழு சூரிய கிரகணம் 6 நிமிடங்கள் 44 விநாடிகளுக்கு நீடிக்கும். இனி இதுபோன்ற மிக நீண்ட சூரிய கிரகணம் 2132ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதியன்று தான் நிகழும்.

ஜூலை 22 அன்றைய சூரிய கிரகணத்தை இந்தியா, ஜப்பானின் சில பகுதிகள், சீனா ஆகிய நாடுகளில் பார்க்க முடியும். இந்தியாவின் மேற்குப் பகுதியில் சூரியோதயத்துடன் தொடங்கும் இந்தச் சூரிய கிரகணம், இந்தியாவின் கிழக்குப் பகுதி வழியாக அப்படியே மியான்மர், ஜப்பானிய தீவுகள் மற்றும் சீனாவைக் கடந்து செல்லும்.

இந்திய நேரப்படி ஜூலை 22 அன்று அதிகாலை 5.28 சந்திரனின் நிழல் பூமியைத் தொடும் போது தொடங்கி காலை 10.42 மணிக்கு சந்திரனின் நிழல் பூமியை விட்டு விலகும் போது இந்தச் சூரிய கிரகணம் முடிவடைகிறது. முழு சூரிய கிரகணத்தின் மேற்கு பகுதியில் சூரத், இந்தூர், போபால், ஜபல்பூர், வாரணாசி மற்றும் பாட்னா போன்ற இந்திய நகரங்கள் மிக அருகில் உள்ளதால், இதனை நன்கு பார்க்க முடியும்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமானது இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கு பாட்னாவுக்கு அருகேவுள்ள தெரகானா என்ற இடம்தான் மிகச் சிறந்த இடம் என்று தெரிவித்துள்ளது. முழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் இங்கே நேர் செங்குத்தாக சுமார் 15 டிகிரியில் இருப்பதே இதற்கு காரணமாகும். இதன் மூலம் இங்கு முழு சூரிய கிரகணத்தை நன்கு பார்க்க முடியும்.

ஒரே மாதத்தில் நிகழும் மூன்று கிரகணங்களின் வரிசையில் இந்த சூரிய கிரகணம் இரண்டாவதாகும். முதலாவதாக ஜூலை 7ஆம் தேதி சந்திர கிரகணமும், ஜூலை 22 அன்று சூரிய கிரகணமும், ஆகஸ்டு 6ஆம் தேதி மீண்டும் ஒரு சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.

சூரிய கிரகணம் எப்படி நிகழ்கிறது?

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது சந்திரனின் நிழலால் சூரியன் முழுமையாகவோ, பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. இதுவே கிரகணமாகும். கிரகணத்தின் போது சூரியனின் ஒளி இல்லாமல் இருட்டாகி விடுவதால் வானில் உள்ள நட்சத்திரங்கள் பிரகாசமாக தெரிவதுடன் சந்திரனைச் சுற்றி ஜொலிக்கும் ஒளி வட்டம் தோன்றுவது அற்புதமான காட்சியாகும்.

இதுபோன்ற காட்சி சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும்போது அமாவாசையின் போது மட்டுமே தோன்றும். பூமியின் பரப்பின் மீது சந்திரனின் நிழல் விழும் போது சந்திரனால் சூரியன் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்படுகிறது. அப்படியானால் ஒவ்வொரு 29 1/2 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை வரும் போதும் சூரிய கிரகணம் ஏற்படுமா என்ற கேள்வி எழும்.

ஆனால் அவ்வாறு நிகழாது. ஏனென்றால் பூமியைச் சுற்றிய சந்திரனின் சுற்று வட்டப் பாதையானது சூரியனைச் சுற்றிய பூமியின் சுற்று வட்டப் பாதைக்கு 5 டிகிரி சாய்ந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு அமாவாசையின் போதும் சந்திரனின் நிழல் விழுவதில்லை. ஆனால் வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறை சந்திரனின் நிழல் பூமியின் மீது விழும்படி நேர் கோட்டில் அமைந்து சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக